சி.இ.டி., தேர்வில் பாடங்கள் சாராத கேள்வி: ஆய்வுக்கு வல்லுனர் குழு
சி.இ.டி., தேர்வில் பாடங்கள் சாராத கேள்வி: ஆய்வுக்கு வல்லுனர் குழு
ADDED : ஏப் 23, 2024 06:04 AM
பெங்களூரு : சி.இ.டி., தேர்வில் பாடங்கள் சாராத கேள்விகளை கேட்டது குறித்து, ஆய்வு செய்ய மாநில அரசு, வல்லுனர் கமிட்டி அமைத்துள்ளது.
இது தொடர்பாக, உயர் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக தேர்வு ஆணையம், ஏப்ரல் 18 மற்றும் 19ல், சி.இ.டி., தேர்வு நடத்தியது. மாநிலம் முழுதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்கள் சம்பந்தப்பட்ட வினாத்தாளில், பாடங்கள் சாராத கேள்விகள் இருந்ததாக தகவல் வந்துள்ளது.
பாடங்களில் இல்லாத கேள்விகள் இருந்ததால், மாணவ - மாணவியர் பாதிப்படைந்ததாக, புகார்கள் வந்துள்ளன. எனவே மறு தேர்வு நடத்தும்படி வேண்டுகோள் வந்துள்ளது. கேள்விகள் குறித்து ஆட்சேபனை தெரிவிக்க, ஏப்ரல் 27 வரை மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சி.இ.டி., பாடத் திட்டங்கள் சாராத கேள்விகள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த, வல்லுனர் கமிட்டியை அரசு அமைத்துள்ளது. வல்லுனர் கமிட்டி அறிக்கை அடிப்படையில், மாணவர்களின் நலனை மனதில் கொண்டு அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

