ஸ்ரீசைலம் அணை சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை உயிருடன் மீட்கும் வாய்ப்பு குறைவு
ஸ்ரீசைலம் அணை சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை உயிருடன் மீட்கும் வாய்ப்பு குறைவு
ADDED : பிப் 25, 2025 02:30 AM

ஹைதராபாத்: தெலுங்கானாவில் அணை சுரங்கத்தில் சிக்கிய எட்டு தொழிலாளர்களை உயிருடன் மீட்கும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக, அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவின் நாகர் கர்னுால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணையில் இருந்து நல்கொண்டா மாவட்டத்துக்கு 4 லட்சம் ஏக்கர் பாசனம், குடிநீர் வசதிக்காக 'ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்' திட்டத்தின் கீழ் 44 கி.மீ., தொலைவுக்கு சுரங்கம் அமைக்கப்படுகிறது.
கடந்த 22ம் தேதி பணி நடந்தபோது, சுரங்கத்தில் மேற்பகுதி இடிந்து இரண்டு பொறியாளர்கள் உட்பட எட்டு பேர் உள்ளே சிக்கினர்.
அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், சுரங்க நிபுணர்கள் அடங்கிய குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஆனால், குறிப்பிட்ட இடத்தில் தண்ணீரும், சகதியும் நிரம்பி கிடப்பதால், எட்டு பேரின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது. மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்தில் முகாமிட்டுள்ள தெலுங்கானா அமைச்சர் ஜூபிளி கிருஷ்ணா ராவ் கூறியதாவது:
உண்மையை கூறுவதாக இருந்தால், எட்டு பேரையும் உயிருடன் மீட்பது மிக மிகக் கடினம். ஏனென்றால், விபத்து நடந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவு வரை நானே நேரடியாக சென்றேன். 9 மீட்டர் சுற்றளவும், 30 அடி உயரமும் கொண்ட சுரங்கப் பாதையில், 25 அடி உயரத்துக்கு சகதி நிறைந்து கிடக்கிறது. எட்டு பேரின் பெயர்களை கூறி அழைத்தபோது எந்த பதிலும் வரவில்லை.
விபத்து நடந்தபோது, அங்கிருந்த பல டன் எடையிலான, சுரங்கம் துளையிடும் இயந்திரத்தையே 200 மீட்டர் துாரத்துக்கு, தண்ணீரின் உந்து விசை தள்ளி விட்டிருக்கிறது.
அந்த இயந்திரத்தின் அடியில் அவர்கள் இருப்பதாக கருதினாலும், அவர்களுக்கு ஆக்சிஜன் எப்படி கிடைக்கும்? ஆனாலும், தண்ணீரை வெளியேற்றும் பணியுடன் ஆக்சிஜனை 'பம்ப்' செய்யும் பணியும் தொடருகிறது.
கடந்த 2023ல் உத்தரகண்டில் நிகழ்ந்த சுரங்க விபத்தின் மீட்புப் பணியில் பணியாற்றிய எலி வளை சுரங்க நிபுணர்களும் மீட்பு பணியில் இருக்கின்றனர்.
குவிந்து கிடக்கும் இடிபாடுகளையும், சகதியையும் அப்புறப்படுத்த தேவையான கருவிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவடைவதற்கு இன்னும் நான்கு நாட்களாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.