மாறுகிறது தெலங்கானா அரசு முத்திரை சந்திரசேகர ராவ் கடும் எதிர்ப்பு
மாறுகிறது தெலங்கானா அரசு முத்திரை சந்திரசேகர ராவ் கடும் எதிர்ப்பு
UPDATED : மே 30, 2024 10:25 PM
ADDED : மே 30, 2024 10:08 PM

ஹைதராபாத் : தெலங்கானா மாநில அரசு முத்திரையை மாற்றும் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் முடிவை எதிர்த்து மிகப்பெரிய இயக்கம் துவக்க உள்ளதாக பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த 2014, ஜூன் 2ம் தேதி, ஆந்திராவில் இருந்து பிரிந்து, நாட்டின் 28வது மாநிலமாக தெலங்கானா உதயமானது. இதன் 10ம் ஆண்டு விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், தெலங்கானா அரசின் முத்திரையை மாற்ற, முதல்வர் ரேவந்த் ரெட்டி முடிவு செய்தார். இதற்கான பணி, ஓவியர் ருத்ரா ராஜேஷம் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறுதி வடிவமைப்பு பணிகள் முடிவடைந்து, முதல்வர் மற்றும் துணை முதல்வரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநில அரசின் முத்திரையில், வாராங்கல் மாவட்டத்தில் உள்ள காக்கத்தியர்கள் நுழைவாயிலும், ஹைதராபாதில் உள்ள சார்மினாரும் இடம் பெற்றுள்ளன.
இவை நிலப்பிரபுத்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக இருப்பதால், அதை மாற்ற முதல்வர் ரேவந்த் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு, பிரபல தெலுங்கு கவிஞர் அண்டே ஸ்ரீ எழுதிய, 'ஜெய ஜெய ஹே தெலங்கானா' என்ற பாடலை, மாநில கீதமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாகுபலி திரைப்படத்துக்காக ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி, மாநில கீதத்துக்கான மெட்டை அமைத்துள்ளார்.
புதிய அரசு முத்திரை மற்றும் மாநில கீத அறிமுக நிகழ்வு நாளை மறுநாள் நடக்கிறது.
அதற்கு முன்னதாக, அது பற்றி விவரிக்க மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சியினருக்கும் முதல்வர் ரேவந்த் அழைப்பு விடுத்தார்.
இதை புறக்கணிக்க இருப்பதாக பாரத் ராஷ்ட்ர சமிதியினர் தெரிவித்துஉள்ளனர்.
புதிய முத்திரையை கைவிடவில்லை எனில், அதற்கு எதிரான போராட்டம் மிகப்பெரிய இயக்கமாக உருவாகும் என, அக்கட்சி தலைவர்கள் எச்சரித்துள்ளனர். முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமாராவ் சார்மினார் சென்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஹைதராபாத்தின் முசி ஆற்றங்கரையில் உள்ள சார்மினார், 1591ல் முகம்மது குலி குப் ஷா என்ற மன்னரால் கட்டப்பட்டது. நான்கு கோபுரங்கள் இருப்பதை குறிப்பிடும் வகையில், சார்மினார் இது அழைக்கப்படுகிறது.