ADDED : ஆக 20, 2024 01:59 AM
பெங்களூரு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, இந்தியாவில் தனி அமைப்பை உருவாக்கி, சதி திட்டங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இரண்டு பயங்கரவாதிகள் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, இந்தியாவில், 'அல்ஹிந்த் டிரஸ்ட்' என்ற அமைப்பை சிலர் உருவாக்கி, சதி திட்டங்களில் ஈடுபட்டதாக, கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்குகள், 2020ல் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டன.
இந்த அமைப்புக்கு ஆள்களை சேர்ப்பதுடன், பல்வேறு பயங்கரவாத செயல்களை நடத்த திட்டமிடப்பட்டது தெரியவந்தது.
தமிழக - கேரள எல்லையில், தமிழக போலீசின் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டது உட்பட பல வழக்குகள் இவர்கள் மீது உள்ளன. இந்த வழக்கில், இதுவரை, 16 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த இந்த அமைப்பின் மூளையாக செயல்பட்ட கர்நாடக மாநிலம் ஷிவமொகா மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் மதீன் தாஹா மற்றும் முசாவிர் ஹூசைன் ஷாஜிப் கடந்த ஏப்., மாதம் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.