நிரந்தர தீர்வு தராமல் ஏமாற்றுவதா? பார்லி விவாதத்தில் கார்கே கொந்தளிப்பு
நிரந்தர தீர்வு தராமல் ஏமாற்றுவதா? பார்லி விவாதத்தில் கார்கே கொந்தளிப்பு
ADDED : ஆக 01, 2024 05:21 PM

புதுடில்லி: 'வேலையின்மை பிரச்னைக்கு பா.ஜ., அரசு தற்காலிகத் தீர்வைக் கூட வழங்காமல் இளைஞர்களை ஏமாற்றுகிறது' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னணி 500 நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி (Internship)அளிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. பயிற்சி காலத்தில் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்; பயிற்சி செலவுகளை நிறுவனங்கள் ஏற்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
துரோகம்
இது தொடர்பான விவாதத்தில், ராஜ்யசபாவில் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: பா.ஜ.,வின் பட்ஜெட்டில் 'பி' என்பது 'துரோகம்' என்பதைக் குறிக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு சாதகமான சூழலை பா.ஜ., உருவாக்கி உள்ளது. முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி வழங்குவோம் என பா.ஜ., அரசு கூறுகிறது.
இடஒதுக்கீடு
கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையின்மை பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை விரும்புகிறார்கள். ஆனால் பா.ஜ., அரசு தற்காலிகத் தீர்வைக் கூட வழங்காமல் அவர்களை கடுமையாக ஏமாற்றுகிறது. பொதுத் துறையில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி., மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகளை சேர்ந்த இளைஞர்களை இடஒதுக்கீடு மூலம் சேர்க்கக் கூடாது என பா.ஜ., விரும்புகிறதா? இவ்வாறு கார்கே பேசினார்.