ஹோட்டல் அதிபர் கொலை வழக்கு சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை
ஹோட்டல் அதிபர் கொலை வழக்கு சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை
ADDED : மே 31, 2024 12:04 AM
மும்பை,:மும்பை ஹோட்டல் அதிபர் ஜெயா ஷெட்டி கொலை வழக்கில், நிழலுலக தாதா சோட்டா ராஜனுக்கு, மஹாராஷ்டிரா சிறப்பு நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்தது.
மஹாராஷ்டிராவின் மும்பையில் பிரபல தாதாவாக இருந்த தாவூத் இப்ராஹிமுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் சோட்டா ராஜன்.
அவரிடம் இருந்து பிரிந்ததை அடுத்து, ஹோட்டல் அதிபர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை மிரட்டி பணம் பறிக்கும் செயல் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் அவர் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 2001ல் மத்திய மும்பை காம்தேவியில் உள்ள கோல்டன் கிரவுன் ஹோட்டல் அதிபர் ஜெயா ஷெட்டியிடமும் அவர் பணம் கேட்டு மிரட்டினார்.
அதற்கு ஒப்புக் கொள்ளாததை அடுத்து, ஜெயா ஷெட்டியை அதே ஆண்டு மே 4ம் தேதி, சோட்டா ராஜனின் அடியாட்கள் ஹோட்டல் வளாகத்திலேயே சுட்டுக் கொன்றனர்.
இந்த வழக்கு விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஜெயா ஷெட்டி கொலை வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தார். தண்டனை தொடர்பான விரிவான விளக்க அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த வழக்கில், ஏற்கனவே மூன்று பேர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர். போதிய ஆதாரம் இல்லாததால் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இது போன்ற பல்வேறு கொலை, ஆள்கடத்தல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட சோட்டா ராஜன், இந்தியாவுக்கு உள்ளேயும், வெளிநாடுகளிலும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
இந்த சூழலில் பத்திரிகையாளர் ஜே டே கொலை வழக்கில், 2011ல் கைது செய்யப்பட்டு தற்போது டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை நான்கு வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள சோட்டா ராஜன் மீது, 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.