முதல்வர் 'பிளாக்மெயில்' பா.ஜ., சுனில்குமார் காட்டம்
முதல்வர் 'பிளாக்மெயில்' பா.ஜ., சுனில்குமார் காட்டம்
ADDED : ஜூலை 22, 2024 06:25 AM
சிக்கமகளூரு: ''தன் ஊழலை மூடி மறைக்க, முதல்வர் சித்தராமையா பிளாக்மெயில் தந்திரத்தில் ஈடுபட்டுள்ளது நகைப்புக்குரியது,'' என பா.ஜ.,வின் முன்னாள் அமைச்சர் சுனில்குமார் தெரிவித்தார்.
சிக்கமகளூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வால்மீகி மேம்பாட்டு ஆணையம், மைசூரு வளர்ச்சி ஆணையத்தின் முறைகேடு வெளிச்சத்துக்கு வருவதற்கு முன், பா.ஜ.,வின் ஊழல் தெரியவில்லையா. தற்போது உங்கள் அரசு உள்ள போதும், ஏன் விசாரணை நடத்தவில்லை. ஊழல் உங்கள் காலை சுற்றும் போது, பா.ஜ.,வை பற்றி முதல்வர் சித்தராமையா பேசுகிறார்.
சட்டசபைக்குள் முதல்வர் சித்தராமையா, எவ்வளவு பொய்களை கூறியுள்ளார். கர்கால் பரசுராம் தீம் பார்க் பணிகளில், 11 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கூறுகிறார். ஆனால், அரசு இன்னும் 11 கோடி ரூபாயை வழங்கவே இல்லை.
பணமே வழங்காமல், ஊழல் எப்படி நடக்கும். சட்டசபைக்குள் இவ்வளவு பொய்கள் சொன்ன முதல்வரை, நான் பார்த்தது இல்லை.
முறைகேடு நடந்திருந்தால், சி.பி.ஐ., இன்டர்போல், சி.ஐ.டி., என, எந்த விசாரணை வேண்டுமானாலும் நடத்தட்டும்.
தன் ஊழலை மூடி மறைக்க, முதல்வர் சித்தராமையா பிளாக்மெயில் தந்திரத்தில் ஈடுபட்டுள்ளது நகைப்புக்குரியது.
மத்திய அமைச்சர் குமாரசாமி, ஷிரூர் மழை பாதிப்பு பகுதிகளுக்கு பார்வையிட சென்றதை பற்றி, காங்கிரஸ் விமர்சிக்கிறது. இதில் இருந்தே இயற்கை சீற்றம், மக்களின் வேதனைகளை அக்கட்சியினர் எந்த மனப்போக்கில் பார்க்கின்றனர் என, தெரிகிறது.
எந்த விஷயத்திலும், காங்கிரசுக்கு உண்மையான அக்கறை இல்லை. மழை சேத பகுதிகளுக்கு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் வந்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அமைச்சர் சென்றதை, காங்கிரசார் விமர்சிக்கின்றனர். ஊழலில் மூழ்கிய அரசுக்கு, மக்கள் இருந்தால் என்ன, இறந்தால் என்ன என்ற அலட்சியம் ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.