இயற்கையை நேசித்து பாதுகாப்போம் முதல்வர் சித்தராமையா அழைப்பு
இயற்கையை நேசித்து பாதுகாப்போம் முதல்வர் சித்தராமையா அழைப்பு
ADDED : ஜூலை 04, 2024 02:41 AM

பெங்களூரு: ''இயற்கையை அனைவரும் நேசித்து, பாதுகாக்க வேண்டும். இது கடினமான பணியல்ல,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு, கண்டீரவா உள் விளையாட்டு மைதானத்தில் நேற்று வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய, 'உலக சுற்றுச்சூழல் தினம்' மற்றும் 'வன மஹோற்சவம்' நிகழ்ச்சியை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.
பின் அவர் பேசியதாவது:
ஒவ்வொரு நாளும் சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாட வேண்டும். மழைநீர் சேகரிப்பு போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இது நம் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். சுற்றுச்சூழல் ஆர்வலர்களாக அனைவரும் சுகாதாரத்தை பேண வேண்டும்.
அனைவரும் பங்கேற்றால் மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். இவ்விஷயத்தில் அரசும், பொது மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்.
மாணவர்களுக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் நன்மைகள் என்ன, சுற்றுச்சூழல், வனம், மனித வாழ்வு, விலங்குகள் குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மனிதர்களை போன்று விலங்குகளும் வாழ உரிமை உண்டு. இதை பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
சுத்தமான குடிநீர் வழங்குவது, சுகாதாரம் காப்பது மாநில அரசின் கடமை. துாய்மையாக இருந்தால் தான், சமுதாயத்தின் ஆரோக்கியம் காக்கப்படும். சமீப காலமாக அசுத்தமான தண்ணீர் குடித்ததால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்த்துள்ளோம். பலர் இறந்துள்ளனர்.
சுத்தமான குடிநீர் வினியோகத்தில் முறைகேடு நடந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டு உள்ளது. சுத்தமான குடிநீர் வழங்க, அரசு தீவிர முயற்சி மேற்கொள்ளும்.
டெங்குவை கட்டுப்படுத்த, பொது மக்களும் கைகோர்க்க வேண்டும். சமீபகாலமாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால், மாநகராட்சி, சுகாதார துறை, பேரூராட்சி நிர்வாக துறையினர் இணைந்து, டெங்குவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொது மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும்.
ஒவ்வொருவரும் இயற்கையின் மீது அன்பை வளர்த்து கொள்ள வேண்டும்.
இயற்கையை பாதுகாப்பது கடினமான பணியல்ல. அதை நேசிக்கும் போக்கு அவசியம். ஒரு மரத்தை வெட்டினால், மற்றொன்றை நட வேண்டும். வனப்பகுதி அதிகரிக்கப்பட வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளில் வெள்ளம், வறட்சியை சந்தித்து வருகிறோம். அதற்கான காரணங்களை ஆய்வு செய்வது அவசியம். ஆராய்ச்சிகள் சரியான முறையில் நப்பதுடன், ஆய்வு மையங்களும் அதிகரிக்க வேண்டும். ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும் விதத்தில், வனத்துறை கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பேட்டரி தள்ளுவண்டி வாகனத்தை, முதல்வர் சித்தராமையா பார்வையிட்டார். இடம்: கண்டீரவா உள்விளையாட்டு மைதான வளாகம், பெங்களூரு.