
ரசிகர்களுக்கு 'குட் நியூஸ்'
திரையுலகில் கடந்த 2008ல் நுழைந்த நடிகை ஹர்ஷிகா பூனச்சா, பல வெற்றி படங்களை கொடுத்தவர். தன்னுடன் நடித்த நடிகர் புவன் பொன்னன்னாவை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். நாளை, புவன் பொன்னன்னா தம்பதி, முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர். ரசிகர்களுக்கு 'குட் நியூஸ்' கொடுத்துள்ளனர். ஹர்ஷிகா கர்ப்பம் அடைந்துள்ளார்.
தற்போது ரவிவர்மாவின் ஓவிய பாணியில் போட்டோ ஷூட் நடத்தி, சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். ஹர்ஷிகா கூறுகையில், ''ரவி வர்மாவின் பெயின்ட்டிங்கால் ஈர்க்கப்பட்டு, அதே போன்று போட்டோ ஷூட் நடத்தினோம். முதல் குழந்தையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.
பட்டு விவசாயிகள் கதை
கடந்த 2011ல் திரைக்கு வந்த, சஞ்சு வெட்ஸ் கீதா படம், வெற்றி நடை போட்டது. இதில் ரம்யா நாயகியாக நடித்திருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதிலும் ரம்யா நடிப்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிதா ராம் நடிக்கிறார்.
கதை குறித்து படக்குழுவினர் கூறுகையில், 'இது பட்டு விவசாயிகளின் போராட்டத்தை மையமாக கொண்ட, காதல் கதையாகும். பெங்களூரின் சுற்றுப்பகுதிகளில், 72 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஸ்ரீநகர் கிட்டி, பட்டு விவசாயியாக நடித்துள்ளார். டைட்டில் பழையது என்றாலும், கதை புதிதாகும். சாது கோகிலா, தபலா நானி உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்,'' என்றனர்.
காமெடிக்கு முக்கியத்துவம்
சில நடிகர்கள் நடிப்புடன் நின்று விடாமல், இயக்கம், தயாரிப்பு, இசை அமைப்பு என மற்ற பணிகளிலும் ஈடுபடுகின்றனர். அதே போன்று தனஞ்செயா தயாரிப்பில் ஈடுபட்டு, வித்யாபதி என்ற படத்தை தயாரிக்கிறார். சமீபத்தில் துணுக்கு வெளியானது. இதில் கராத்தே கற்கும் போது, நாயகன் வித்யாபதி செய்யும் குளறுபடியை காண்பித்துள்ளனர். இது குறித்து அவரிடம் கேட்ட போது, ''நாயகன் வித்யாபதி, மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். இது காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாகும். நாயகனாக நாகபூஷண், நாயகியாக மலைகா வசுபால் நடித்துள்ளனர்,'' என்றார்.
இடது கை பழக்கம்
கடந்த 2022ல் படப்பிடிப்பு துவங்கிய, எட கையே அபகாதக்கே காரணா படம், இப்போதுதான் திரைக்கு வருகிறது. சமீபத்தில் படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. படக்குழுவினர் கூறுகையில், ''நடிகர் திகந்த் இதுவரை 'சாக்லேட் பாய்' போன்று இருந்தார். ரொமான்டிக் ஹீரோவான இவர், இந்த படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இடது கை பழக்கம் உள்ளவர்கள் அனுபவிக்கும் பிரச்னைகள், சங்கடங்கள் பற்றி படத்தில் காண்பித்துள்ளோம். படத்தில் திகந்துக்கு ஜோடியாக தனு ஹர்ஷா நடிக்கிறார்,'' என்றனர்.
மக்களுக்கு நல்ல கருத்து
வினோத் பிரபாகர் நடிக்கும், 25வது படத்துக்கு டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு பலராமன தினகளு என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்து பட இயக்குனர் சைதன்யாவிடம் கேட்ட போது, ''இது, நான் இயக்கும் 10வது படமாகும். இதை பத்மாவதி ஜெயராம், ஸ்ரேயஸ் தயாரிக்கின்றனர். வினோத் பிரபாகரின் 25வது படத்தை இயக்குவது திரில்லிங்கான அனுபவமாக உள்ளது. என்னை ஈர்த்த உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. பொதுவாக என் படத்தில், மக்களுக்கான ஒரு நல்ல கருத்து இருக்கும். இந்த படத்திலும் இத்தகைய கருத்துகளை எதிர்பார்க்கலாம்,'' என்றார்.
அதிர்ஷ்டம் இல்லாத நடிகையா?
திருமணமானாலும் சில நடிகையருக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்கும். குழந்தை பெற்றவர்களும் ஹீரோயினாக வலம் வந்த உதாரணங்கள் பல உள்ளன. இந்த விஷயத்தில், நடிகை ஐந்திரிகா ராய்க்கு அதிர்ஷ்டம் இல்லை. பட வாய்ப்புகள் இல்லாமல் வருத்தத்தில் உள்ளார்.
ஐந்த்ரிகா ராய் கூறுகையில், ''கன்னடத்தில் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். திருமணமான பின், எனக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்காக நான் யாரை குற்றம்சாட்டுவது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். தற்போது ஹிந்தியில் இரண்டு, மூன்று வெப் சீரிசில் நடிக்கிறேன்,'' என்றார்.