ADDED : மே 17, 2024 12:03 AM
பேரம்பூர்: ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சியில் உள்ளது. இங்கு லோக்சபா மற்றும் சட்டசபைக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இங்கு உள்ள கஞ்ஜம் மாவட்டம், அஸ்கா லோக்சபா தொகுதிக்கும், அத்தொகுதியின் கீழ் வரும் கலிகோட் சட்டசபைக்கும் வரும் 20ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
கலிகோட் எம்.எல்.ஏ.,வாக உள்ள சூர்யமணி பைத்தியா மீண்டும் அத்தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் பூர்ண சந்திர சேத்தி என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.
அந்த தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீ கிருஷ்ண சரண்பூர் கிராமத்தில், பா.ஜ., மற்றும் பிஜு ஜனதா தளம் வேட்பாளர்களின் போஸ்டர்களை ஒட்டுவதில், இரு கட்சி தொண்டர்களிடையே நேற்று மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ., தொண்டர் திலிப் குமார் பஹானா, 28 கொல்லப்பட்டார்.
மேலும் ஏழு பா.ஜ.,வினர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பா.ஜ.,வினர், பிஜு ஜனதா தளம் எம்.எல்.ஏ., சூர்யமணி பைத்தியாவின் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

