ADDED : மார் 22, 2024 06:56 AM
ஷிவமொகா: தேர்தல் அதிகாரிகள் கிடங்கில் சோதனையிட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.01 கோடி ரூபாய் மதிப்புள்ள உடைகளை பறிமுதல் செய்தனர்.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானதால், நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. போலீசார், தேர்தல் அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிக்கின்றனர். தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து, வாகனங்களை சோதனையிட்டு, ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.
கிடங்குகள், கடைகளில் திடீர் சோதனையிட்டு, பதுக்கப்பட்ட பொருட்களை கைப்பற்றுகின்றனர். ஷிவமொகாவின் கே.ஆர்.புரத்தில் உள்ள டீலர்ஸ் லாஜிஸ்டிக் கூரியர் கிடங்கில், ஆவணங்கள் இல்லாத ரெடிமேட் உடைகள் பதுக்கி வைத்துள்ளதாக தகவல் வந்தது.
போலீசார், தேர்தல் அதிகாரிகள் நேற்று மாலை அங்கு சென்று, திடீர் சோதனை நடத்தினர். ஆவணங்கள் இல்லாத 1.01 கோடி ரூபாய் மதிப்புள்ள உடைகளை, பறிமுதல் செய்தனர். இவற்றை வர்த்தக வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கிடங்கு உரிமையாளர் மீது, தொட்டபேட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

