அசிங்கமா போச்சு குமாரு... ஆதங்கப்படுகிறார் பினராயி விஜயன்!
அசிங்கமா போச்சு குமாரு... ஆதங்கப்படுகிறார் பினராயி விஜயன்!
ADDED : செப் 21, 2024 02:37 PM

திருவனந்தபுரம்: 'வயநாடு நிவாரணப் பணிகள் குறித்து ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்புகிறது. இதனால், கேரள மக்களுக்கும், அரசிற்கும் உலக அளவில் அவப்பெயர் ஏற்பட்டு விட்டது' என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
வயநாடு துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 359 பேரின் இறுதிச் சடங்குகளைச் செய்ய ரூ.2.76 கோடி செலவிட்டதாக மாநில அரசு கூறியுள்ளது. ஒவ்வொரு உடலுக்கும் அடக்கம் செய்ய ரூ.75 ஆயிரம் செலவானதாக கணக்கு தரப்பட்டுள்ளது. உடல் அடக்கம், ஊனமுற்றோர் மறுவாழ்வு போன்ற செலவினங்களுக்கு எழுதப்படும் செலவினங்களை மத்திய அரசு அப்படியே முழுவதுமாக வழங்கி விடும் என்ற எண்ணத்தில், இப்படி மிகைப்படுத்தி கணக்கு எழுதப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியானது.
அரசிற்கு அவப்பெயர்
இந்நிலையில், இன்று(செப்., 21) கேரளா முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரளா அரசின் புள்ளிவிவரங்கள் மற்றும் செலவு கணக்கு குறித்து ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்புகிறது. மத்திய உதவியை நியாயமற்ற முறையில் பெறுவதற்கு முயற்சி நடப்பதாக ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டுள்ளது. இதனால், கேரள மக்களுக்கும், அரசிற்கும் உலக அளவில் மதிப்பு போய்விட்டது. அரசிற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளும் இந்த அறிக்கைகள் குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.
இழிவுபடுத்துவது நோக்கம்
இதன் பின்னணியில் எந்த வகையிலும் மாநில அரசை இழிவுபடுத்துவதே நோக்கமாக இருந்தது. பேரிடர் ஏற்பட்டால் குறிப்பேடு தயாரிப்பது அமைச்சர்கள் அல்ல, மாறாக அந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்கள் தான். இந்த நிபுணர்கள் தயாரித்த தரவுகளை ஊடகங்கள் தவறாகப் புரிந்து கொண்டது. குறிப்பாணையில் உள்ள புள்ளிவிவரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல, ஆனால் திட்டமிடப்பட்ட மதிப்பீடுகள் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.