ADDED : ஜூன் 27, 2024 11:07 PM
பெங்களூரு: 'துணை முதல்வர் பதவி குறித்து பேசக்கூடாது' என அமைச்சர்களை, முதல்வர் சித்தராமையா கண்டித்து உள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு நடக்கிறது. துணை முதல்வராக சிவகுமார் உள்ளார். ஆட்சியின் துவக்கத்தின் போதே சித்தராமையா, சிவகுமார் இடையில் முதல்வர் பதவிக்கு போட்டி எழுந்தது.
ஆனால், ராகுல் ஆதரவுடன் சித்தராமையா முதல்வர் ஆனார். சோனியாவின் கருணையால் சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது.
சிவகுமார் எதிர்ப்பு
ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று, கட்சி மேலிடம் கூறியதாக சொல்லப்பட்டது. ஆனால் அது பற்றி இதுவரை தெளிவான தகவல் இல்லை. காங்கிரஸ் அரசு அமைந்து ஓராண்டும் நிறைவு பெற்றுவிட்டது.
இதற்கிடையில் அவ்வப்போது சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள், கூடுதல் துணை முதல்வர் பதவியை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு கட்சி மேலிடத்தில், சிவகுமார் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர், துணை முதல்வர் பதவி விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மாநில தலைவராக இருக்கும் சிவகுமாரை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதை வைத்து எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்வதால், சித்தராமையாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மேலிடம் முடிவு
இந்நிலையில், 'துணை முதல்வர் பதவி குறித்து ஊடகங்கள் முன்பு யாரும் பேசக்கூடாது' என, அமைச்சர்களுக்கு, சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். 'துணை முதல்வர் பதவி பற்றி பேசுவதால் கட்சிக்கும், ஆட்சிக்கும் நெருடல் ஏற்படுகிறது' என்றும் கூறியுள்ளார்.
துணை முதல்வர் பதவி குறித்து அடிக்கடி பேசி வரும், கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணாவிடம் மொபைல் போனில் பேசிய முதல்வர், 'தயவு செய்து துணை முதல்வர் பதவி குறித்து பேசாதீர்கள். எதுவாக இருந்தாலும் கட்சி மேலிடம் முடிவு செய்யும்' என்றும், கூறியுள்ளார்.
துணை முதல்வர் விவகாரம் குறித்து சிவகுமார் நேற்று அளித்த பேட்டியில், ''கூடுதல் துணை முதல்வர் பற்றி பேசுபவர்கள், ஊடகங்கள் முன்பு பேசுவதை விட்டுவிட்டு, டில்லிக்கு சென்று கட்சி மேலிட தலைவர்களுடன் பேசட்டும். அப்போதுதான் அவர்களுக்கு விடை கிடைக்கும்,'' என்று காட்டமாக கூறினார்.

