தர்ஷனுக்கு உதவிய அமைச்சருக்கு முதல்வர் சித்தராமையா எச்சரிக்கை? நாகேந்திராவின் 'கதி' ஏற்படும் என காட்டம்!
தர்ஷனுக்கு உதவிய அமைச்சருக்கு முதல்வர் சித்தராமையா எச்சரிக்கை? நாகேந்திராவின் 'கதி' ஏற்படும் என காட்டம்!
ADDED : ஆக 30, 2024 09:54 PM

பெங்களூரு: தர்ஷனுக்கு சிறையில் ராஜ உபசாரம் கிடைக்க அமைச்சர் ஒருவர் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த அமைச்சரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் சித்தராமையா, 'முன்னாள் அமைச்சர் நாகேந்திராவின் நிலை உங்களுக்கும் ஏற்படும்' என, எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சித்ரதுர்காவின் ரேணுகா சாமி, 33, என்பவரை கொலை செய்த வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த, நடிகர் தர்ஷனுக்கு ராஜ உபசாரம் அளிக்கப்பட்டது தொடர்பான புகைப்படம் வெளியானது. இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர்கள் உட்பட ஒன்பது பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
முதல்வர் சித்தராமையாவின் அமைச்சரவையில் உள்ள சக்தி வாய்ந்த அமைச்சர் ஒருவரின் வாய்மொழி உத்தரவின்படி, தர்ஷனுக்கு சிறையில் ராஜ உபசாரம் செய்து கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் முதல்வர் கடுப்பானார்.
பங்கு உள்ளதா?
தர்ஷனுக்கு உதவியதாக கூறப்படும் அமைச்சரிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, முதல்வர் பேசி உள்ளார்.
'தர்ஷன் வழக்கில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்தால், நீங்கள் அவருக்கு உதவி செய்து கொண்டு இருக்கிறீர்கள். இதை நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் முன்னாள் அமைச்சர் நாகேந்திராவின் நிலை தான் உங்களுக்கும் ஏற்படும்' என எச்சரித்ததாக கூறப்படுகிறது.
அதற்கு அந்த அமைச்சர், 'தர்ஷனுக்கு நான் எந்த உதவியும் செய்யவில்லை. என் பெயரை தேவையின்றி இழுக்கின்றனர்' என்று மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
அப்போது முதல்வர், “உங்களது பங்கு உள்ளதா, இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆனாலும் உங்களை எச்சரிக்கிறேன்' என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், ரேணுகாசாமி கொலை செய்யப்பட்டு வரும் 8ம் தேதியுடன், மூன்று மாதங்கள் ஆக போகிறது. இதனால் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, விஜயநகர் உதவி போலீஸ் கமிஷனர் சந்தன் தலைமையிலான போலீசார்தயாராகி வருகின்றனர்.