அரபிக்கடலில் இந்திய கடற்படை பயிற்சி: பாக்., கடற்படையும் நடத்துவதால் பரபரப்பு
அரபிக்கடலில் இந்திய கடற்படை பயிற்சி: பாக்., கடற்படையும் நடத்துவதால் பரபரப்பு
ADDED : ஆக 10, 2025 10:23 PM

புதுடில்லி: அரபிக்கடல் பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடற்படையினர் ஒரே சமயத்தில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
பகல்ஹாம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ஆப்பரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. மேலும், 100 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்களையும் இந்தியா தாக்கியது. மேலும், பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படை தளபதியும் கூறினார்.
ஆப்பரேஷன் சிந்தூர் தொடர்பாக பார்லிமென்ட்டில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் கெஞ்சியதால் தான் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், நாளை (ஆக.,11) மற்றும் நாளை மறுநாள் அரபிக் கடலில் இந்திய கடற்படையினர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். அதே சமயத்தில் பாகிஸ்தான் கடற்படையினரும் அரபிக்கடலில் தனது பிராந்திய நீர்ப்பகுதியில் பயிற்சிகளை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஒரே சமயத்தில் இருநாடுகளும் அரபிக்கடலில் பயிற்சியில் ஈடுபட இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.