மல்லேஸ்வரத்தில் 'காபி வித் ஷோபா' பழைய நினைவுகளை பகிர்ந்து உற்சாகம்
மல்லேஸ்வரத்தில் 'காபி வித் ஷோபா' பழைய நினைவுகளை பகிர்ந்து உற்சாகம்
ADDED : ஏப் 07, 2024 05:55 AM

மல்லேஸ்வரம், : 'காபி வித் ஷோபா' என்ற வினோதமான நிகழ்ச்சியில், பெங்களூரு வடக்கு பா.ஜ., வேட்பாளர் ஷோபா, தான் அரசியலுக்குள் வந்த பழைய நிகழ்வை விளக்கினார்.
பெங்களூரு வடக்கு லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் மத்திய விவசாய துறை இணை அமைச்சர் ஷோபா போட்டியிடுகிறார்.
இந்த லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட மல்லேஸ்வரம் ஹவ்யகா பவனில், தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா, 'காபி வித் ஷோபா' என்ற வாக்காளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை நேற்று நடத்தினார்.
அப்பகுதியை சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்களுக்கு 'பில்டர் காபி' வழங்கப்பட்டது. அதை பருகிக் கொண்டே, ஷோபாவிடம் கலந்துரையாடினர்.
அப்போது அவர் பேசியதாவது:
உடுப்பியின் ஒரு குக்கிராமத்தில் பிறந்தேன். பள்ளியில் 7 வயதில் என்னை சேர்த்தனர். ஆரம்பத்தில் 7ம் வகுப்பு வரை, காடு, மேடு என நடந்தே சென்று படித்தோம். வீட்டில் போதிய வசதி இல்லாததால், தாத்தா வீட்டில் தங்கியிருந்தேன்.
ஆங்கிலம், ஹிந்தி, கணிதம் சொல்லிக் கொடுக்க ஆசிரியர்களே இல்லை. 8ம் வகுப்பு முதல் உடுப்பியின் புத்துாரில் படித்தேன். பாக்கு, தென்னை, மிளகு விளைவித்த நினைவு இருக்கிறது.
அப்போது, ஒரு கிலோ பாக்கு 3 ரூபாய்க்கு விற்கப்பட்டது. என் தந்தை 3ம் வகுப்பும், தாய் 4ம் வகுப்பும் படித்திருந்தனர். எங்கள் கிராமத்தில் நான் தான் முதல் முதுகலை பட்டதாரி.
ஒரு கிறிஸ்துவ உயர்நிலைப்பள்ளியில் படித்து கொண்டிருந்தபோது, நெற்றியில் பொட்டு வைக்கவும், கைகளில் வளையல் அணிந்து கொள்வதற்கு வாய்ப்பு வழங்கவில்லை. அன்றே ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பில் இணைந்து போராடினேன்.
என் தந்தை ஒரு ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர். அவர் நடத்திய புருஷோத்தம் கிளையில் நானும் இணைந்து செயல்பட்டேன்.
பள்ளி பருவத்தின்போதே அரசியல் ஆர்வம் அதிகம். தந்தை எதிர்ப்பையும் மீறி, அரசியல் கூட்டங்களுக்கு சென்று தலைவர்களின் பேச்சை கேட்டேன். ஆனால், நானே அரசியலுக்கு வருவேன் என்று நினைக்கவில்லை.
பிற்காலத்தில் தீவிர அரசியலில் ஈடுபட்டு, பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவால் மத்திய இணை அமைச்சர் ஆனேன். என்னை நம்பி மீண்டும் வாய்ப்பு தந்துள்ளனர். உங்கள் ஆதரவுடன் நம்பிக்கையை நிறைவேற்றுவேன்.
இவ்வாறு அவர்பேசினார்.

