இடிந்து விழுந்த சிவாஜி சிலை: ஒப்பந்ததாரர் மீது வழக்கு
இடிந்து விழுந்த சிவாஜி சிலை: ஒப்பந்ததாரர் மீது வழக்கு
ADDED : ஆக 28, 2024 12:44 AM

மும்பை, மஹாராஷ்டிராவில், சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை இடிந்து விழுந்த விவகாரத்தில், சிலையை வடிவமைத்து நிறுவிய ஒப்பந்ததாரர் மற்றும் கட்டுமான ஆலோசகர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில், மராத்திய மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர பிரமாண்ட சிலை நிறுவப்பட்டது.
கடந்த ஆண்டு டிச., 4ம் தேதி, இந்திய கடற்படை தினத்தன்று, இந்த சிலையை பிரதமர் திறந்து வைத்தார். ஒரு சில மாதங்களே ஆன நிலையில், சிவாஜி சிலை நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது.
இது, ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, பொதுப்பணித்துறையின் உதவிப் பொறியாளர் போலீசில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், சிலையை வடிவமைத்து நிறுவிய ஒப்பந்ததாரர் ஜெய்தீப் ஆப்தே மற்றும் கட்டுமான ஆலோசகர் சேத்தன் பாட்டீல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சிவசேனா - உத்தவ் பிரிவு எம்.பி., சஞ்சய் ராவத் கூறுகையில், ''சிவாஜி சிலை உடைந்ததற்கு, பிரதமர் மோடி, முதல்வர் ஷிண்டே, துணை முதல்வர் பட்னவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் பொறுப்பேற்க வேண்டும். மராத்திய மக்களின் உணர்வுகளை புண்படுத்திய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதவி விலக வேண்டும்,'' என்றார்.
துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் நேற்று கூறியதாவது:
நம் கடற்படை தான், சத்ரபதி சிவாஜி சிலையை வடிவமைத்து நிறுவியது. மாநில அரசுக்கு அதில் தொடர்பில்லை. பலவீனமான இரும்புக் கம்பிகளை வைத்து கட்டியுள்ளனர்.
அங்கு தொடர்ந்து வீசும் கடல் காற்றினால், இரும்புக் கம்பிகள் அரிக்கப்பட்டுள்ளன. இந்தக் விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.