ADDED : ஜன 04, 2026 01:36 AM

இந்தூர்: சமீபத்தில், மத்திய பிரதேசம், இந்துாரில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி, 10 பேர் உயிரிழந்தனர். தற்போது இங்கு பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. 'இந்தியாவின் மிகவும் சுத்தமான நகரம் என விருது அளிக்கப்பட்ட இந்துாரில், இப்படி அசுத்தமான குடி நீர் எப்படி வழங்கப்படுகிறது?' என கேள்விகள் எழுந்துள்ளன.
ஒரு ஆசிரியை, 10 ஆண்டுகளுக்கு பின் பிறந்த குழந்தைக்கு, இந்த குடிநீரைக் கலந்து பால் கொடுத்துள்ளார்; அந்த குழந்தை இறந்துவிட்டது. அந்த குடும்பம், இப்போது சோகத்தில் மூழ்கியுள்ளது. இதைப் போல பல குடும்பங்கள் குழந்தைகளை இழந்துள்ளன.
'குடிநீர் செல்லும் குழாயில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதுடன், கழிவுகளை சேமிக்க, 'டேங்க்' எதுவும் கட்டப்படவில்லையாம். இ தனால் கழிவுநீர் குடிநீரோடு கலந்து, குழந்தைகள் இறக்க காரணமாகிவிட்டது' என, அரசு அறிக்கை தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச அமைச்சர் கைலாஷ் வர்கியாவின் பேச்சு இந்த விவகாரத்தில் பா.ஜ.,விற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, 'இது தேவையில்லாத கேள்வி' என கூறியதோடு, ஒரு கேவலமான வார்த்தையையும் பயன்படுத்தினார் அமைச்சர். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்த, தன் செயலுக்கு எக்ஸ் தளத்தில் வருத்தம் தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்துார் இறப்புகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் லோக்சபா காங்கிரஸ் தலைவர் ராகுல்; மற்ற எதிர்க்கட்சிகளும் பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்துள்ளன.
இந்த விவகாரம் மோடியை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாம். அமைச்சர் கைலாஷை கண்டித்ததுடன், மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவிடம் பேசி, 'இந்துார் பெயரைக் கெடுத்து விட்டீர்களே... கவனமாக இருந்திருக்க வேண்டாமா? இதற்கு காரணமானவர்களை கடுமையாக தண்டியுங்கள்' எனவும் சொல்லி இருக்கிறாராம்.

