கொலம்பியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 132ஆக உயர்வு மாயமான 2,700 பேர் கதி என்ன?
கொலம்பியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 132ஆக உயர்வு மாயமான 2,700 பேர் கதி என்ன?
UPDATED : ஆக 12, 2026 06:38 AM
ADDED : ஆக 11, 2026 08:04 PM
பொகொட்டா, ஆக.12-
கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை, 132ஆக உயர்ந்தது. இதற்கிடையே, 2,700 பேர் காணவில்லை என்று கூறப்படுகிறது.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், நேற்று முன்தினம், 7.4 ரிக்டர் அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில், நாட்டின் ஏழ்மையான சோகோ மாகாணமும், புகழ்பெற்ற காபி உற்பத்தி மண்டலமான ரிசாரால்டா மாகாணமும் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன. நாடு முழுதும் 1,577 குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இதில் 37 கட்டடங்கள் முற்றிலும் தரைமட்டமாயின. மேலும், 18 மருத்துவமனைகள் மற்றும் 52 பள்ளிகள் பலத்த சேதமடைந்தன.
கலி நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பல்கலை மருத்துவமனையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், நோயாளிகள் உள்ளே சிக்கிக் கொண்டனர். மருத்துவமனையின், 30 சதவீத கட்டமைப்பு சேதமடைந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கிய நோயாளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 132ஆக உயர்ந்துள்ளது. மேலும், 570-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரிசாரால்டாவின் பெரேரா நகரில் மட்டும், 60 பேர் உயிரிழந்துள்ளனர். போலீசார், தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
கொலம்பியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன. இதற்கிடையே, நாடு முழுதும், 2,700க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என, அஞ்சப்படுகிறது.
