ADDED : மே 03, 2024 10:52 PM

தாவணகெரே : தாவணகெரே மக்களை நம்பியே தேர்தலில் போட்டியிடுவதாக, சுயேச்சை வேட்பாளர் வினய்குமார் உருக்கமாக கூறினார்.
தாவணகெரே லோக்சபா தொகுதி சுயேச்சை வேட்பாளர் வினய்குமார் அளித்த பேட்டி: 'அரசியலில் ஒரே குடும்பத்தினர் இருக்கக் கூடாது. புதியவர்களும் வர வேண்டும்' என, மக்கள் விரும்புகின்றனர். மக்கள் விருப்பத்தை நிறைவேற்ற சுயேச்சையாக போட்டியிடுகிறேன்.
காங்கிரசில் 'சீட்' கிடைக்காததால், நான் அமைதியாக இருப்பேன் என்று சிலர் நினைத்தனர். அடங்கி, ஒடுங்கிச் செல்லும் நபர், நான் இல்லை. தாவணகெரேயில் இரு குடும்பங்கள் இடையில் நடக்கும் போட்டியால், வினய்குமார் வெற்றி பெறுவார் என்பது சிலரின் கருத்து. ஆனால் குடும்ப போட்டியில் லாபம் பார்க்கும் எண்ணம் எனக்கு இல்லை. மக்களை நம்பியே தேர்தலில் போட்டியிடுகிறேன்.
மக்கள் தான் எனக்கு மேலிடம். எனக்கு காங்கிரஸ் சீட் கிடைக்க விடாமல் செய்தது யார் என்று தெரியும். பா.ஜ., காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு நட்சத்திர பிரசாரகர்கள் பிரசாரம் செய்தாலும், தாவணகெரே மக்கள், என்னை வெற்றி பெற வைப்பர் என்று நம்பிக்கை உள்ளது. ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் நடத்துகிறேன். அதன்மூலம் இளைஞர்களுக்கு தொடர்ந்து போட்டி தேர்வு, பயிற்சி அளிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.