மோசடி வழக்கில் சைத்ரா கும்பல் மிரட்டுவதாக எஸ்.பி.,யிடம் புகார்
மோசடி வழக்கில் சைத்ரா கும்பல் மிரட்டுவதாக எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : மார் 28, 2024 05:15 AM
பெங்களூரு : சட்டசபை தேர்தலில், பா.ஜ., சீட் வாங்கிக் கொடுப்பதாக தொழிலதிபர்களை மோசடி செய்த வழக்கின் சாட்சியை, சைத்ரா மற்றும் கூட்டாளிகள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஹிந்து அமைப்பின் பிரமுகர் என கூறிக்கொண்ட சைத்ரா குந்தாபுரா, தனக்கு பா.ஜ., மேலிட தலைவர்களுடன், நல்ல நட்பு இருப்பதாக பலரிடம் அறிமுகம் செய்து கொண்டார். கடந்த சட்டசபை தேர்தலில், உடுப்பியின், பைந்துார் தொகுதியில் பா.ஜ., சீட் பெற்றுத் தருவதாக கூறி, தொழிலதிபர் கோவிந்த பாபு என்பவரிடம் ஐந்து கோடி ரூபாய் பெற்றார். சீட் பெற்று தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுதொடர்பாக, பன்டேபாளையா போலீஸ் நிலையத்தில், கோவிந்த பாபு புகார் அளித்தார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார், சைத்ரா, தன்ராஜ் உட்பட, இவரது கூட்டாளிகளை கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள், சீட் ஆசை காண்பித்து, மோசடி செய்து பணம் பறித்தது தெரிந்தது. தற்போது இவர்கள் ஜாமினில் வெளியே வந்தனர்.
இந்நிலையில், வழக்கில் முக்கியமான சாட்சியான ராமுவை இவர்கள் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிக்கமகளூரை சேர்ந்த ராமு, சலுான் வைத்துள்ளார். சைத்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் கூறியபடி, சிலருக்கு மேக்கப் போட்டுள்ளார். எனவே வழக்கில் முக்கிய சாட்சியாக ராமு சேர்க்கப்பட்டுள்ளார்.
ராமுவை சாட்சியம் அளிக்கக் கூடாது. அளித்தால் கொலை செய்வதாக அவர்கள் மிரட்டி தாக்கியதாக சிக்கமகளூரு எஸ்.பி.,யிடம் அவரது குடும்பத்தினர் புகார்அளித்துள்ளனர்.