ADDED : மார் 23, 2024 06:38 AM
பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 2020ல் நடந்த, பிட்காயின் முறைகேடு வழக்கை, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரிக்கின்றனர். முன்னாள் சி.சி.பி., இன்ஸ்பெக்டர் பிரசாந்த் பாபு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.எஸ்.பி., ஸ்ரீதர் பூஜாரிக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது.
கடந்த மாதம் 27ம் தேதி, பெங்களூரு விதான் சவுதா அருகே, ஸ்ரீதர் பூஜாரியை, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் கைது செய்ய முயன்றனர். அப்போது எஸ்.ஐ.டி., அதிகாரிகள் இருவர் மீது, காரால் மோதிவிட்டு தப்பினார். தற்போது தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில், பிட்காயின் வழக்கில் கைதில் இருந்து தப்பிக்க, பெங்களூரு 1 வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில், முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நேற்று முன்தினம் நீதிபதி ஆனந்த் விசாரித்து, இருதரப்பு வாதங்களையும் கேட்டார்.
'கைதில் இருந்து தப்பிக்கவே, அதிகாரிகள் மீது காரால் மோதுகிறார். முன்ஜாமின் கிடைத்தால் என்னென்ன செய்வார்' என்று, மனுதாரர் வக்கீலை பார்த்து, நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

