திமுக உடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ் குழு அமைப்பு
திமுக உடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ் குழு அமைப்பு
ADDED : நவ 22, 2025 11:25 AM

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலைக் கருதி, திமுக உடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ் குழு அமைத்துள்ளது. இதை வரவேற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், 'அரசல் புரசலான செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும்' என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது இருந்தே அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி, நடிகர் விஜயின் தவெக உடன் கூட்டணி பற்றி பேச இருப்பதாக, அவ்வப்போது தகவல்கள் பரவி வந்தன. இந்த விவகாரம், தமிழக அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில், திமுக உடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ், 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உள்ளது. அந்த குழுவில், கிரிஷ் ஜோடங்கர், செல்வப்பெருந்தகை, சூரஜ் ஹெக்டே, நிவேதித் அல்வா, ராஜேஷ்குமார் ஆகிய 5 பேர் இடம் பெற்று உள்ளனர்.
இது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக சட்டசபை தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 'ஐந்து உறுப்பினர் குழு' வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன். இண்டியா கூட்டணியின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன். இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

