வாக்குமூலம் போதாது; ஆதாரம் வேண்டும் ஜாமின் தான் விதி: சுப்ரீம் கோர்ட்
வாக்குமூலம் போதாது; ஆதாரம் வேண்டும் ஜாமின் தான் விதி: சுப்ரீம் கோர்ட்
ADDED : ஆக 29, 2024 03:01 AM

புதுடில்லி, : 'ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மற்றொருவரை கைது செய்யக்கூடாது. அதற்கு போதிய ஆதாரங்கள் தேவை. ஜாமின் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு' என உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்தது.
ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் மீது, பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில், அவருடைய நெருங்கிய உதவியாளரான பிரேம் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளதாவது:
பண மோசடி தடுப்பு சட்ட விதிகளின்படி, ஒருவர் குற்றம் செய்துள்ளார். அவரை விடுவித்தால், மீண்டும் குற்றத்தில் ஈடுபடுவார் என்பதற்கான காரணங்கள் இருந்தால் மட்டுமே ஜாமின் மறுக்க முடியும்.
மற்றபடி, வழக்கில் தொடர்புடைய ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மற்றொருவரை கைது செய்யக்கூடாது. அவர் குற்றம் செய்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் தேவை. வாக்குமூலங்களை ஆதாரங்களாக எடுத்துக்கொள்ள முடியாது.
டில்லி மதுபான ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமின் உட்பட பல வழக்குகளில், ஜாமின் தான் விதி, சிறை என்பது விதிவிலக்கு என்பதை உச்ச நீதிமன்றம் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரேம் பிரகாஷ் குற்றம் செய்துள்ளார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை.
மேலும் அவரை ஜாமினில் விடுவித்தால், சாட்சியங்களை கலைத்து விடுவார் என்பதற்கான காரணங்களையும் தெளிவாக குறிப்பிடவில்லை. அதன்படி, இவருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

