காங்., மேலிடத்துக்கு பங்கு பிரஹலாத் ஜோஷி பாய்ச்சல்
காங்., மேலிடத்துக்கு பங்கு பிரஹலாத் ஜோஷி பாய்ச்சல்
ADDED : ஆக 04, 2024 11:15 PM

தார்வாட்: ''மூடா, வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில் காங்கிரஸ் தலைமைக்கும் பங்கு உள்ளது. எனவே, தார்மீக பொறுப்பேற்று, முதல்வர் பதவி விலக வேண்டும்,'' என மத்திய உணவு, பொது வினியோக துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
தார்வாட் மாவட்டம், ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஒரு மாநிலத்தின் முதல்வரே, ஊழலில் மூழ்கும்போது, அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் அமைதியாக இருப்பரா. மூடா முறைகேடு, வால்மீகி மேம்பாட்டு ஆணையம் ஊழல் குறித்து பலமுறை குறிப்பிட்டுள்ளேன். இந்த ஊழல் பணத்தில், காங்கிரஸ் மேலிடத்துக்கும் பங்கு உள்ளது.
ஊழல் வழக்கில் நீதி விசாரணை என்பது ஊழலில் இருந்து தப்பிக்கும் வழி.
இதில் இருந்து தப்புவதற்கான, 'கேம் பிளான்' என்பது தெளிவாக தெரிகிறது. இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். தவறு செய்யவில்லை என்றால், எதற்காக காங்கிரஸ் பயப்பட வேண்டும்.
இரண்டு முறைகேடுகளிலும் காங்கிரஸ் தலைமைக்கு தொடர்பு உள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று, முதல்வர் பதவி விலக வேண்டும். சித்தராமையாவின் கைகள் கறை படியாத கைகள் என்றால், இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்கட்டும்.
யாத்கிர் எஸ்.ஐ., இடமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சன்னரெட்டி பாட்டீல் தலைமறைவாக உள்ளார். எம்.எல்.ஏ.,க்கள் கூட ஊழலில் மூழ்கி உள்ளனர். அதிகாரிகள் இடமாற்றம், ஏலம் விடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.