காங்., அரசு தானாக கவிழும்; பா.ஜ., - எம்.எல்.ஏ., ஆரூடம்
காங்., அரசு தானாக கவிழும்; பா.ஜ., - எம்.எல்.ஏ., ஆரூடம்
ADDED : ஆக 05, 2024 09:44 PM

ஹூப்பள்ளி : ''அதிகாரம் வேண்டாம் என கூற நாங்கள் சன்னியாசிகள் அல்ல. ஆனால், அதற்காக அரசை கவிழ்க்க மாட்டோம். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களே அரசுக்கு எதிராக திரும்பி உள்ளனர்,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., மகேஷ் தெங்கினகாயி தெரிவித்தார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், மற்றொரு பாதயாத்திரை நடத்த வேண்டும் என, கூறுவதில் எந்த தவறும் இல்லை. இது பற்றி, கட்சி மேடையில் தான் பேச வேண்டும். பொது இடங்களில், கட்சி தொடர்பான விஷயங்களை பேசுவது சரியல்ல.
கட்சியில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும், பா.ஜ., மேலிடம் கவனிக்கிறது. எங்கள் மேலிடம் பலவீனமாக இல்லை. கட்சிக்கு எதிராக பேசினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தயங்காது.
நாங்களோ, மத்திய அரசோ கர்நாடக காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயற்சிக்க மாட்டோம். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களே, அரசு மற்றும் கட்சிக்கு எதிராக திரும்பி உள்ளனர்.
மாநில மக்கள், காங்கிரசிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்து, நல்லாட்சி நடத்தும்படி உத்தரவிட்டுள்ளனர். ஊழல் செய்யவும், போலீஸ் அதிகாரிகளின் இறப்புக்கு காரணமாக இருக்கவும், ஆட்சியை ஒப்படைக்கவில்லை.
அரசு தானாகவே கவிழ்ந்தால், பா.ஜ., ஆட்சி அமைக்க தயாராகும். அதிகாரம் தேவையில்லை என, மறுக்க நாங்கள் சன்னியாசிகள் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.