திசை திருப்ப காங்கிரஸ் முயற்சி கோட்டா சீனிவாச பூஜாரி ஆவேசம்
திசை திருப்ப காங்கிரஸ் முயற்சி கோட்டா சீனிவாச பூஜாரி ஆவேசம்
ADDED : ஜூன் 10, 2024 05:10 AM

பெங்களூரு : ''நான், சமூக நலத்துறை அமைச்சராக இருந்த போது ஊழல் நடந்திருந்தால், பாரபட்சமின்றி விசாரணை நடத்துங்கள். அரசியலுக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறாதீர்கள்,'' என உடுப்பி - சிக்கமகளூரு பா.ஜ., - எம்.பி., கோட்டா சீனிவாச பூஜாரி தெரிவித்தார்.
பா.ஜ., ஆட்சி காலத்தில், கோட்டா சீனிவாச பூஜாரி, சமூக நலத்துறை அமைச்சராக இருந்த போது, போவி வளர்ச்சி கழகத்தில் 100 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அக்கட்சியின் பா.ஜ., முன்னாள் அமைச்சர் கூலிஹட்டி சேகர் குற்றம் சாட்டியிருந்தார்.
பதிலடி
இதற்கு பதிலளித்து எம்.பி., கோட்டா சீனிவாச பூஜாரி கூறியதாவது:
சமூக நலத்துறை அமைச்சராக, நான் இருந்த காலத்தில் ஊழல் நடந்திருந்தால், மாநில அரசு, பாரபட்சமின்றி விசாரணை நடத்தட்டும். அரசியலுக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறாதீர்கள். உங்களிடம் ஆதாரம் இருந்தால், விரிவான விசாரணைக்கு வசதியாக ஆவணங்களை, அரசிடம் அளிக்க வேண்டும்.
சமூக நலத்துறை அமைச்சரான உடனேயே, துறைக்கு உட்பட்ட மாநகராட்சியில் முறைகேடு நடந்ததாக தகவல் கிடைத்தது. வழக்கின் விசாரணையை, சி.ஐ.டி.,யிடம் ஒப்படைத்தேன்.
பா.ஜ., ஆட்சியில் இருந்து வெளியேறி, ஓராண்டு நிறைவடைகிறது. விசாரணை என்ன என்பது இன்னும் தெரியவில்லை.
விதிமீறலில் எனக்கும் பங்கு இருப்பது தெரியவந்தால், என்னிடமும் விசாரிக்கட்டும்.
கூலிஹட்டி சேகர் ஏன் இந்த குற்றச்சாட்டை கூறுகிறார் என்று தெரியவில்லை. இதற்கு முன், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதற்காக, மன்னிப்பும் கேட்டுள்ளார்.
திசை திருப்ப முயற்சி
ஆனால், வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் சட்ட விரோத பணம் பரிமாற்றம் மோசடியில், நாகேந்திரா, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபோது, காங்கிரஸ் தலைவர்கள் என் பெயரை இழுத்து, திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.
நான், 63 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. நானே, லோக் ஆயுக்தாவுக்கு கடிதம் எழுதி, விசாரணை நடத்த கோரினேன்.
விசாரணை நடத்திய லோக் ஆயுக்தாவினர், என்னிடம் 3.5 கோடி ரூபாய் சொத்து மட்டுமே உள்ளது என்று சான்றிதழ் அளித்தது, இன்னும் என்னிடம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

