எக்ஸ்பிரஸ் கால்வாய் திட்டத்துக்கு காங்கிரஸ் வேட்பாளரே எதிர்ப்பு
எக்ஸ்பிரஸ் கால்வாய் திட்டத்துக்கு காங்கிரஸ் வேட்பாளரே எதிர்ப்பு
ADDED : மார் 28, 2024 03:30 AM
துமகூரு : துணை முதல்வர் முதல்வர் சிவகுமாரின், முக்கியமான திட்டத்துக்கு காங்கிரஸ் வேட்பாளர் முத்தஹனுமேகவுடா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதியில், தன் தம்பி சுரேஷை வெற்றி பெற வைக்க, துணை முதல்வர் சிவகுமார் பல திட்டங்களை வகுக்கிறார். லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ராம்நகருக்கு குடிநீர் கொண்டு வரும் துமகூரு, குனிகல்லில் எக்ஸ்பிரஸ் கால்வாய் திட்டத்தை வகுத்துள்ளார்.
துமகூரு, குனிகல்லில் புதிதாக கால்வாய் அமைத்து, ஹேமாவதி ஆற்றின் நீரை ராம்நகருக்கு கொண்டு வரும் திட்டம் இது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதை பொருட்படுத்தாமல், 910 கோடி ரூபாய் செலவில் திட்டத்தை செயல்படுத்த, நீர்ப்பாசன துறை அமைச்சருமான, துணை முதல்வர் சிவகுமார், சமீபத்தில் அடிக்கல் நாட்டினார்.
இந்தத் திட்டத்தை முன்வைத்து, பெங்களூரு ரூரல் தொகுதியில் காங்., தலைவர்கள் ஓட்டு கேட்கின்றனர்.
ஆனால் இந்தத் திட்டத்துக்கு, துமகூரு காங்., வேட்பாளர் முத்தஹனுமேகவுடா ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, நேற்று முத்தஹனுமேகவுடா கூறியதாவது:
ஏற்கனவே உள்ள கால்வாய் மூலமாக, தண்ணீர் கொண்டு செல்லட்டும். தனியாக எக்ஸ்பிரஸ் கால்வாய் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. தனியாக எக்ஸ்பிரஸ் கால்வாய் அமைத்தால், துமகூரின், மற்ற தாலுகாக்களுக்கு அநியாயம் ஏற்படும்.
எங்கள் மாவட்டத்தின் நலனை கருதி, இந்தத் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். தாலுகாவின் நீரை திருப்பினால், அனைவரும் அதையே செய்ய துவங்குவர். இதற்கு முன்பு நான் எம்.பி.,யாக இருந்தபோதும் எதிர்ப்பு தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

