காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் எண்ணம் இல்லை! மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பேட்டி
காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் எண்ணம் இல்லை! மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பேட்டி
ADDED : ஆக 17, 2024 11:03 PM

ஹூப்பள்ளி: “கர்நாடக காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் எண்ணம், பா.ஜ.,விடம் இல்லை,” என, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறி உள்ளார்.
மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஹூப்பள்ளியில் நேற்று அளித்த பேட்டி:
கர்நாடகாவில் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கு காங்கிரசுக்கு, மக்கள் ஓட்டுப் போட்டுள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நாங்கள் கவிழ்க்க மாட்டோம். எங்களிடம் அந்த எண்ணமும் இல்லை.
காங்கிரஸ் ஐந்து ஆண்டுகளும் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். 2018 சட்டசபை தேர்தலில் நாங்கள் 104 இடங்களில் வெற்றி பெற்றோம். காங்கிரஸ் 68 இடங்களில் வென்று இருந்தது.
எங்களை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்காக ம.ஜ.த.,வுடன் கூட்டணி வைத்தனர். பின், அரசியல் மாற்றங்களால் நாங்கள் ஆட்சியை பிடித்தோம்.
ஆனால் பின்பக்க வாசல் வழியாக ஆட்சிக்கு வந்ததாக எங்களை விமர்சித்தனர். இந்த முறை விமர்சனத்திற்கு ஆளாக மாட்டோம்.
முதல்வர் சித்தராமையா ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர் கொண்டுள்ளார். தன்னை மிகவும் துாய்மையானவர் என்று அவர் நினைத்தால், முதல்வர் பதவியில் தொடரட்டும். எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.