காங்கிரஸ் பிரமுகர் மனைவிக்கு பாக்., உளவு அமைப்புடன் தொடர்பு?
காங்கிரஸ் பிரமுகர் மனைவிக்கு பாக்., உளவு அமைப்புடன் தொடர்பு?
ADDED : பிப் 14, 2025 11:55 PM

புதுடில்லி: காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி துணைத் தலைவர் கவுரவ் கோகோய் மனைவி எலிசபெத்துக்கு, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உடன் தொடர்பு இருப்பதாக பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். எதிர்க்கட்சி துணைத் தலைவராக அசாமின் ஜோர்ஹாட் தொகுதியில் தேர்வான காங்., - எம்.பி., கவுரவ் கோகோய் பதவி வகிக்கிறார்.
இவர், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பிறந்த எலிசபெத் கோல்பர்னை, 2013ல் திருமணம் செய்தார்.
சரமாரி கேள்வி
இந்நிலையில், எலிசபெத் தொடர்பாக, காங்., கட்சிக்கும், கவுரவ் கோகோய்க்கும், பா.ஜ., தலைவர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர் அஜய் அலோக் கூறியதாவது:
அசாம் எம்.பி., கவுரவ் கோகோயை திருமணம் செய்வதற்கு முன், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உடன், எலிசெபத்துக்கு தொடர்பு இருந்தது தெரியுமா? பாகிஸ்தான் திட்ட கமிஷன் தலைவராக இருந்த அலி தாகீர் சேக் உடனும், அவர் பணியாற்றி இருக்கிறார்.
இந்தியாவின் புகழை சர்வதேச அளவில் சீர் குலைக்கும் ஜார்ஜ் சோரஸின் நண்பரான அமெரிக்க எம்.பி., தாம் உடனும், எலிசபெத்துக்கு நட்பு உண்டு.
வெளிநாடுகளுக்கு வளர்ச்சி நிதியாக அமெரிக்கா அளிக்கும் பணத்தை, 'காரிடாஸ்' என்ற அமைப்பின் வாயிலாக பெற்று, இந்தியாவில் மதமாற்றப் பணிகளில் எலிசபெத்தின் அண்ணி ஈடுபடுகிறார்.
கடந்த 2014ல் முதன் முறையாக எம்.பி.,யானதும் சபாநாயகர் அனுமதியோ, உள்துறை அமைச்சக அனுமதியோ பெறாமல் பாகிஸ்தான் துாதரகத்துக்கு கவுரவ் கோகோய் சென்றது ஏன்?
அதைத் தொடர்ந்து, இந்திய கடலோர கடல் பாதுகாப்பில் எத்தனை ரேடார்கள் அமைக்க திட்டம் உள்ளது என லோக்சபாவில் கேள்வி கேட்டது ஏன்?
பாகிஸ்தான் துாதரக கட்டளையை ஏற்று அந்த கேள்வியை கேட்டாரா? தேச பாதுகாப்பு தொடர்பான இந்த விஷயத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோர் விளக்கம் தர வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
மறுப்பு
அஜய் அலோக்கின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள காங்., - எம்.பி., கவுரவ் கோகாய், “என்னையும், என் குடும்பத்தையும் இழிவு படுத்துவதற்கு, அதீத எல்லைக்கு பா.ஜ., சென்றுள்ளது. பா.ஜ., கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. இது தொடர்பாக, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்,” என்றார்.