சபரிமலையில் தங்கமுலாம் பூசும் செலவை ஏற்றவருக்கு நிரந்தர வருவாய் இல்லை: தேவசம் விஜிலன்ஸ் அறிக்கையில் அதிர்ச்சி
சபரிமலையில் தங்கமுலாம் பூசும் செலவை ஏற்றவருக்கு நிரந்தர வருவாய் இல்லை: தேவசம் விஜிலன்ஸ் அறிக்கையில் அதிர்ச்சி
ADDED : அக் 12, 2025 11:49 PM

கொச்சி: 'சபரிமலையில் தங்கமுலாம் பூசும் பணிகளுக்கான செலவை ஏற்ற தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்திக்கு நிரந்தரமான வருவாய் இல்லை' என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழல் கண்காணிப்பு பிரிவு, இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள சபரிமலை கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இக்கோவிலின் துவாரபாலகர்கள் சிலையில் இருந்து, 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், தேவசம் போர்டு அதிகாரிகள் ஒன்பது பேர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
மேலும், தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற, கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடமும் விசாரணை நடந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து கேரள உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
மறு புறம் தேவசம் போர்டின் ஊழல் கண்காணிப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இறுதி விசாரணை அறிக்கையை கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தியின் வருவாய் குறித்து அவரது பட்டய கணக்காளர் மூலம் ஆய்வு செய்தோம். அதில் அவருக்கு நிரந்தரவருவாய் இல்லை என்பது தெரிந்தது.
கோவில் கருவறை கதவுக்கு தங்கமுலாம் பூசும் செலவை போத்தி ஏற்றுக் கொண்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால், உண்மையில், அதற்காக செலவு செய்தது கர்நாடகாவின் பல்லாரியைச் சேர்ந்த தொழிலதிபர் கோவர்தனன் மற்றும் பெங்களூரு தொழிலதிபர் அஜித் குமார் தான்.
உன்னிகிருஷ்ணன் போத்தியும் கோவிலுக்காக சில நன்கொடைகளை வழங்கி உள்ளார். அவரது செலவில் நிகழ்ந்த பல்வேறு பணிகள் குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
துவாரபாலகர்கள் சிலைகள் மற்றும் கோவில் கதவுகளில் தங்கம் மாயமானது தொடர்பான அந்த இரு வழக்குகளிலும், தொழிலதிபர் போத்தியின் பெயரே முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.