'மாஜி' பிரதமர் இந்திராவுக்கு எதிரான சிதம்பரம் பேச்சால் காங்.,கில் ...கொந்தளிப்பு! 40 ஆண்டுகளுக்கு முந்தைய பிரச்னையை பேசியதால் பரபரப்பு
'மாஜி' பிரதமர் இந்திராவுக்கு எதிரான சிதம்பரம் பேச்சால் காங்.,கில் ...கொந்தளிப்பு! 40 ஆண்டுகளுக்கு முந்தைய பிரச்னையை பேசியதால் பரபரப்பு
UPDATED : அக் 12, 2025 11:59 PM
ADDED : அக் 12, 2025 11:49 PM

புதுடில்லி:''பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலில் பதுங்கிய பயங்கரவாதிகளை வெளியேற்ற, 1984ம் ஆண்டில், 'ஆப்பரேஷன் புளூ ஸ்டார்' என்ற ராணுவ நடவடிக்கைக்கு, அப்போதைய பிரதமர் இந்திரா உத்தரவிட்டது தவறானது,'' என, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான சிதம்பரம் கருத்து தெரிவித்தது, அக்கட்சியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 'பா.ஜ.,வின் குறைகளை சுட்டிக்காட்டாமல், 40 ஆண்டுகளுக்கு முந்தைய பிரச்னையை பேசுவது ஏன்?' என, காங்., மூத்த தலைவர்கள் பலர், அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம், சமீபத்தில் ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அதில், 'கடந்த, 2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க, அப்போதைய காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தயாராக இருந்தது.
'ஆனால், அமெரிக்கா உட்பட வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்ததால், அந்த தாக்குதல் திட்டம் கைவிடப்பட்டது' என்றார். இது, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 'நான் பேசியதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு விட்டன' என்று, சிதம்பரம் மழுப்பினார்.
குறை கூற முடியாது
இந்நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள கசவுலி என்ற இடத்தில், 'குஷ்வந்த் சிங் இலக்கிய விழா - 2025' நேற்று முன்தினம் நடந்தது.
இதில் பங்கேற்ற சிதம்பரம் பேசியதாவது:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலில் பதுங்கிய பயங்கரவாதிகளை வெளியேற்ற, 1984ல், 'ஆப்பரேஷன் புளூ ஸ்டார்' என்ற பெயரில், ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள, அப்போதைய பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான இந்திரா ஒப்புதல் அளித்தது தவறானது. இதற்கான விலையாக தன் உயிரையே அவர் பறிகொடுத்தார்.
ஆனாலும், இந்த தவறுக்காக, இந்திராவை மட்டும் நாம் குறை கூற முடியாது. ராணுவம், காவல் துறை, உளவுத்துறை என அனைத்து தரப்பினரும் கூடிப்பேசி எடுக்கப்பட்ட கூட்டு முடிவு அது.
சில ஆண்டுகள் கழித்து, ராணுவத்தை பயன்படுத்தாமலேயே, பொற்கோவிலை சரியான வழியில் நாங்கள் மீட்டோம்.
'ஆப்பரேஷன் புளூ ஸ்டார்' நடவடிக்கைக்கு பின், பஞ்சாபின் கிராமப்புறங்களுக்கு தப்பியோடிய ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை கைது செய்ய, 'ஆப்பரேஷன் உட்ரோஸ்' என்ற நடவடிக்கையை, நம் ராணுவம் வெற்றிகரமாக மேற்கொண்டது.
காலிஸ்தான் பிரிவினைவாத கோரிக்கை தற்போது மங்கி விட்டது.
பொருளாதார பிரச்னைகள் முக்கியத்துவம் பெற்றுவிட்டன. பஞ்சாபில், பிரிவினைவாதம் முடிந்து விட்டது என்றே நான் நம்புகிறேன். உண்மையான பிரச்னை என்பது பொருளாதார சூழல் தான். இவ்வாறு அவர் பேசினார்.
நியாயமற்றது
சிதம்பரத்தின் கருத்து தொடர்பாக, காங்., மூத்த தலைவரும், ராஜ்யசபா முன்னாள் எம்.பி.,யுமான ரஷீத் ஆல்வி நேற்று கூறியதாவது:
'ஆப்பரேஷன் புளூ ஸ்டார்' சரியா, தவறா என்பது வேறு விஷயம். ஆனால், 40 ஆண்டுகளுக்கு பின், காங்கிரசையும், இந்திராவையும் சிதம்பரம் தாக்கிப் பேசுவது ஏன்? இந்திரா செய்தது தவறு என்று கூற, அவரை கட்டாயப்படுத்தியது எது? பா.ஜ., மற்றும் பிரதமர் மோடி செய்வதையே சிதம்பரமும் செய்கிறார்; இது, துரதிருஷ்டவசமானது.
சிதம்பரம் காங்கிரசை தொடர்ந்து விமர்சிப்பது, பல்வேறு சந்தேகங்களையும், தவறான அபிப்பிராயங்களையும் எழுப்புகிறது. அவர் மீது குற்றவியல் வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
இதனால், காங்கிரசை தாக்கிப் பேச அவருக்கு ஏதேனும் அழுத்தம் தரப்படுகிறதா? பா.ஜ.,வின் குறைகளையும், ஊழலையும் எடுத்துரைப்பதற்கு பதிலாக, காங்கிரசை சிதம்பரம் விமர்சிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்திராவை அவர் விமர்சிப்பது நியாயமற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே, பாகிஸ்தானுக்கு ஆதரவாக, காங்கிரஸ் செயல்படுகிறது என, பிரதமர் மோடியும், பா.ஜ.,வினரும் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சிதம்பரத்தின் கருத்து, 'வெறும் வாயை மென்று கொண்டிருந்த பா.ஜ.,வினருக்கு, அவல் கொடுத்தது போலாகி விட்டது' என, காங்கிரஸ் தலைவர்களும் தங்களின் அதிருப்தியை வெளிப் படுத்தி வருகின்றனர்.