எதிர்க்கட்சிகளின் ஊழலை கிளற காங்., திட்டம்; அரசின் முறைகேடுகளை கேள்வி கேட்பதால் அதிரடி
எதிர்க்கட்சிகளின் ஊழலை கிளற காங்., திட்டம்; அரசின் முறைகேடுகளை கேள்வி கேட்பதால் அதிரடி
ADDED : ஜூலை 19, 2024 05:42 AM
பெங்களூரு : கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் பணம், சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதை முன் வைத்து, காங்கிரஸ் அரசை எதிர்க்கட்சிகளான பா.ஜ., --- ம.ஜ.த., வாட்டி வதைக்கின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், இந்த கட்சிகளின் ஆட்சியில் நடந்த முறைகேடுகளை கிளற, சித்தராமையா அரசு தயாராகிறது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 135 தொகுதிகளை கைப்பற்றி, பெரும்பான்மையுடன் அரசு அமைந்தும், முதல்வர் சித்தராமையாவால் நிம்மதியாக ஆட்சி நடத்த முடியவில்லை.
இவர் இரண்டாவது முறை முதல்வரானதை, கட்சியில் சில தலைவர்களால் சகிக்க முடியவில்லை. என்ன செய்து இவரை பதவியில் இருந்து கீழே இறக்கலாம் என, ஆலோசிக்கின்றனர்.
சர்ச்சை அமைச்சர்கள்
பதவியை தக்க வைத்து கொள்ள, சித்தராமையா போராடுகிறார். இவருக்கு முதல்வர் பதவி மலர் கிரீடமாக இல்லை; முள் கிரீடமாக உள்ளது. இவரது அமைச்சரவையில் உள்ள, சில அமைச்சர்களே சர்ச்சையில் சிக்குகின்றனர்.
வால்மீகி மேம்பாட்டு ஆணைய அதிகாரி சந்திரசேகர், திடீரென தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலைக்கு முன், ஆணையத்தில் நடக்கும் முறைகேடுகளை விவரித்திருந்தார்.
ஆணையத்துக்கு சொந்தமான பணத்தை, சட்டவிரோதமாக வேறு கணக்குக்கு பரிமாற்றம் செய்ய, நெருக்கடி கொடுப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகள் நலத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. முறைகேட்டில் துறை அமைச்சர் நாகேந்திராவுக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. எனவே இவரை ராஜினாமா செய்யும்படி முதல்வர் உத்தரவிட்டார்.
இதன்படி அவரும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முறைகேடு குறித்து விசாரணை நடத்த எஸ்.ஐ.டி., அமைக்கப்பட்டது.
ஈ.டி., விசாரணை
பல கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதால், அமலாக்கத்துறையும் விசாரணையை துவக்கியது. இதில் வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம், லோக்சபா தேர்தலில் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பல்லாரி தொகுதியில் காங்., வேட்பாளர் துக்காராம் வெற்றிக்காக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இது அரசை நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது.
இதற்கிடையில் மைசூரு நகர வளர்ச்சி ஆணையமான, 'மூடா'வில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி பெயரில், 14 வீட்டுமனைகள் பெற்றிருப்பது அம்பலமானது. 'மூடா'வில் மனை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. தன் சொந்த மாவட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதால், முதல்வர் சித்தராமையா தர்மசங்கடத்தில் நெளிகிறார். இந்த விஷயத்தில் சில அமைச்சர்களை தவிர, மற்றவர்கள் முதல்வருக்கு ஆதரவாக நிற்கவில்லை; பேசவும் இல்லை.
வால்மீகி மேம்பாட்டு ஆணையம், மூடா முறைகேடுகளை முன் வைத்து, முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என, மைசூரில் பா.ஜ., போராட்டம் நடத்தியது. தற்போது சட்டசபை, மேலவையிலும் இவ்விஷயம் எதிரொலிப்பதால், சபை நிகழ்ச்சிகள் முடங்குகின்றன.
முதல்வர் கடுப்பு
இதனால் கடுப்படைந்துள்ள முதல்வர், பா.ஜ.,வின் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை, ம.ஜ.த.,வின் குமாரசாமி ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகளை கிளற, முடிவு செய்துள்ளார். தேவராஜ் அர்ஸ் டிரக் டெர்மினல் கார்ப்பரேஷனில் நடந்த ஊழல் தொடர்பாக, முன்பு பா.ஜ.,வின் வீரய்யா கைது செய்யப்பட்டார்.
தேவராஜ் டிரக் டெர்மினல், போவி மேம்பாட்டு ஆணையத் தில் நடந்துள்ள முறை கேடுகளை முன் வைத்து, எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் அரசு தயாராகிறது.
முறைகேடுகளின் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.