திமுக கவுன்சிலர் ரவுடித்தனம்: வீடியோ வெளியிட்டு அம்பலப்படுத்தினார் அண்ணாமலை
திமுக கவுன்சிலர் ரவுடித்தனம்: வீடியோ வெளியிட்டு அம்பலப்படுத்தினார் அண்ணாமலை
ADDED : ஆக 26, 2025 04:05 PM

சென்னை: திருவாரூர் நகராட்சி 30வது வார்டு திமுக கவுன்சிலர் புருஷோத்தமனின் ரவுடித்தனத்தை வீடியோவாக வெளியிட்டு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் நகராட்சி 30வது வார்டு திமுக கவுன்சிலர் புருஷோத்தமன். திருவாரூர்கட்டபொம்மன் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக பேனர் வைக்க ஆதரவாளர்களுடன் வந்தார். கிஷோர் (வயது 26) என்பவரது வீட்டின் முன் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இங்கெல்லாம் பேனர் வைக்க கூடாது என கிஷோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கவுன்சிலர் புருஷோத்தமனும் அவரது ஆதரவாளர்களும் கிஷோரை சுற்றி வளைத்து தாக்கினர். தடுக்க வந்த கிஷோரின் நண்பர் விக்னேஷுக்கும் அடி உதை விழுந்தது. படுகாயமடைந்த கிஷோர், விக்னேஷ் திருவாரூர் அரசு ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளளனர்.
வீடியோ அடிப்படையில் கவுன்சிலர் புருஷோத்தமன் உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கை: திருவாரூர் வார்டு கவுன்சிலர் புருஷோத்தமன் மற்றும் அவரது கும்பல், தனது வீட்டின் முன் பேனர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருவரைத் தாக்கினர்.
அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை, குண்டர்கள் என்பது திமுகவின் அரசியல் கலாசாரம். குண்டர்கள் மற்றும் வன்முறையில் செழித்து வளரும் உங்கள் கட்சியின் செயல்பாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டு விட்டு தப்பி விட முடியாது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.