இந்தியா ஆக்கிரமிப்பு கொள்கையை நம்பியதில்லை: ராஜ்நாத் சிங்
இந்தியா ஆக்கிரமிப்பு கொள்கையை நம்பியதில்லை: ராஜ்நாத் சிங்
ADDED : ஆக 26, 2025 04:30 PM

விசாகப்பட்டினம்:'நம் நோக்கம் சக்தியைக் காட்டுவது அல்ல. இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்புக் கொள்கையை நம்பியதில்லை,' என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஹிம்கிரி ஆகிய இரண்டு அதிநவீன போர்க்கப்பல்களை மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த விழாவில் ராஜ்நாத் சிங் பேசியாதாவது:
நம் நோக்கம் சக்தியைக் காட்டுவது அல்ல. இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்புக் கொள்கையை நம்பியதில்லை, நாம் எப்போதும் முதலில் எந்த நாட்டையும் தாக்கியதில்லை என்பது உலகுக்குத் தெரியும். அதற்காக, நாம் எப்போதும் பின்வாங்குவோம் என்று அர்த்தமாகாது. நமது பாதுகாப்புக்கு எதிரிகளால் ஆபத்து வரும்போது, சரியான பதிலை எப்படி அளிப்பது என்று நமக்குத் தெரியும். நம் நாட்டின் மீது நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதல், நமக்கு அது பெரும் சவாலாக இருந்தது, அதற்கு நாம், மிகுந்த யோசனையுடனும், கவனத்துடனும் பதிலளித்தோம். 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம், பயங்கரவாத தளங்களை வேரோடு அழிக்க முடிவு செய்து, அதை வெற்றிகரமாக நிறைவேற்றினோம்.
இந்த நடவடிக்கை முடிவடையவில்லை, அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.