முஸ்லிம்களுக்கு காங்., முன்னுரிமை பா.ஜ., அடுத்த 'வீடியோ ரிலீஸ்'
முஸ்லிம்களுக்கு காங்., முன்னுரிமை பா.ஜ., அடுத்த 'வீடியோ ரிலீஸ்'
ADDED : ஏப் 27, 2024 01:08 AM
புதுடில்லி, முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2009ல் பேசிய மற்றொரு 'வீடியோ'வை வெளியிட்டு, காங்., மீதான தாக்குதலை பா.ஜ., தீவிரப்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதாகவும், எஸ்.சி., - எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இடஒதுகீட்டை பறித்து, முஸ்லிம்களுக்கு வழங்க காங்., திட்டமிட்டுள்ளதாகவும் பா.ஜ., குற்றஞ் சாட்டி வருகிறது.
நிரூபணம்
இது தொடர்பாக, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பேசிய வீடியோ ஒன்றை, சமீபத்தில் வெளியிட்டது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் 2009ல் பேசிய மற்றொரு வீடியோவை பா.ஜ., தற்போது வெளியிட்டுள்ளது.
அதில் அவர் பேசியுள்ளதாவது:
சிறுபான்மையினருக்கு, குறிப்பாக ஏழை முஸ்லிம்களுக்கு நம் நாட்டின் வளங்களில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். நாட்டின் வளங்கள் என்று வரும்போது, அதன் முதல் உரிமை முஸ்லிம்களுக்கே உள்ளன.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
'முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிப்பது காங்கிரஸ் கட்சியின் தெளிவான கொள்கை என, நாங்கள் கூறியது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி உள்ளது.
'இடஒதுக்கீடு முதல், நாட்டின் வளங்கள் வரை, அனைத்திலும் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிக்கும் காங்கிரஸ் மனநிலைக்கு, இது மிக சிறந்த உதாரணம்' என, பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது.
இது குறித்து பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாவது:
எஸ்.சி., - எஸ்.டி., உள்ளிட்ட பட்டியலினத்தவர், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் இடஒதுக்கீட்டை பறித்து, அதை முஸ்லிம்களுக்கு வழங்குவதே காங்., மற்றும், 'இண்டியா' கூட்டணியினரின் மறைமுக கொள்கை.
நாட்டின் வளங்கள் மீதான முதல் உரிமை முஸ்லிம்களுக்கே என, காங்., கூறுகிறது. அது ஏழைகளுக்கு சொந்தமானது என, பிரதமர் மோடி கூறுகிறார்.
கடந்த 2009ல் மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், முன்னாள் பிரதமர் மன்மோகன் இதை கூறியுள்ளார்.
வலியுறுத்தல்
அதை வாய் தவறி அவர் கூறவில்லை. வேண்டுமென்றே, திட்டமிட்டு தன் கருத்தை வலியுறுத்தி உள்ளார்.
சச்சார் கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில், தலித்களை விட முஸ்லிம்கள் மிக மோசமான நிலையில் இருப்பதாக, பொய்யான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, முஸ்லிம்களை எஸ்.சி., பிரிவில் சேர்க்கவும், அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளை முஸ்லிம்களுக்கு வழங்கவும் காங்., அடித்தளத்தை அமைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

