காங்கிரசுக்கு 100 தொகுதிகளில் வெற்றி கிடைப்பதே சந்தேகம்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
காங்கிரசுக்கு 100 தொகுதிகளில் வெற்றி கிடைப்பதே சந்தேகம்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
ADDED : மே 26, 2024 05:54 PM

புதுடில்லி: 'நடந்து வரும் லோக்சபா தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெற முடியாது. அவர்களுக்கு 100 தொகுதிகளில் வெற்றி கிடைப்பதே சந்தேகம்' என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஆங்கில மீடியாவிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பா.ஜ., 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். இதில் பா.ஜ., 240 முதல் 260 தொகுதிகளிலும் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியானது 35 முதல் 45 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராவார்.
சந்தேகம்
கிழக்கு மற்றும் தெற்கில் கூடுதலாக 20 முதல் 25 தொகுதிகளை பா.ஜ., கைப்பற்றும். நடந்து வரும் லோக்சபா தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெற முடியாது. அவர்களுக்கு 100 தொகுதிகளில் வெற்றி கிடைப்பதே சந்தேகம். காங்கிரசால் 3 இலக்க எண்களில் வெற்றி பெற முடியாது.
முன்னேற்றம்
கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை விட கூடுதலாக வெற்றி பெறுவார்களா என்பது குறித்து எந்த வித யோசனையும் எனக்கு இல்லை. நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லை.
காங்கிரஸ் இந்த தேர்தலில் 65, 68, 72 அல்லது 55 தொகுதிகளில் வெற்றி பெறுவார்களா? என்பது எனக்கு தேவையற்ற விஷயம். 55 தொகுதிகளில் இருந்து 65 அல்லது 68 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னேற்றம் காண்பது என்பது பற்றி யார் கவலைப்பட போகிறார்கள்?. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.
2014ம் ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலில் 44 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
2019ம் ஆண்டில், நடந்த தேர்தலில் கூடுதலாக 8 தொகுதிகளை கைப்பற்றி 52 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.