பா.ஜ.,வுக்கு எதிராக காங்., போட்டி போராட்டம்; விஜயேந்திரா, குமாரசாமிக்கு சிவகுமார் கேள்வி
பா.ஜ.,வுக்கு எதிராக காங்., போட்டி போராட்டம்; விஜயேந்திரா, குமாரசாமிக்கு சிவகுமார் கேள்வி
ADDED : ஆக 03, 2024 04:17 AM

பிடதி : கர்நாடகாவில், பா.ஜ., - ம.ஜ.த., பாதயாத்திரைக்கு எதிரான காங்கிரஸ் போராட்டம் நேற்று பிடதியில் துவங்கியது. அப்போது, பா.ஜ., ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகள் குறித்தும், மத்திய அமைச்சர் குமாரசாமியின் சொத்து விபரங்கள் குறித்தும், துணை முதல்வர் சிவகுமார் கேள்வி எழுப்பினார்.
முறைகேடு
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் நடந்த வால்மீகி மேம்பாட்டு ஆணையம் மற்றும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் நடந்த முறைகேடுகளை கண்டித்தும், சித்தராமையாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், பா.ஜ., - ம.ஜ.த., கட்சியினர் இன்று பெங்களூரில் பாதயாத்திரை துவங்குகின்றனர். மைசூரு வரை இந்த பாதயாத்திரை நடக்கிறது.
இதற்கிடையில், பா.ஜ., எங்கெல்லாம் பாதயாத்திரை நடத்துகிறதோ, அந்த பகுதிகளில், ஏட்டிக்கு போட்டியாகவும், ஒரு நாள் முன்னதாகவும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது.
அந்த வகையில், ராம்நகர் மாவட்டம், பிடதியில் நேற்று காங்கிரசின், 'மக்கள் இயக்கம்' என்ற போராட்டத்தை துவக்கி வைத்து, துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
கடந்த பா.ஜ., ஆட்சியில், போவி மேம்பாட்டு வாரியத்தில் 87 கோடி ரூபாய் முறைகேடு நடந்தபோது, முதல்வர் யார், அமைச்சர் யார், வாரிய தலைவர் யார் என்பதை பா.ஜ.,வினர் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால், ஒரு வாரம் கழித்து நாங்களே சொல்வோம்.
தேவராஜ் அர்ஸ் டிரக் டெர்மினல் வாரியத்தில், 47 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. வாரிய தலைவராக இருந்த முன்னாள் பா.ஜ., - எம்.எல்.சி., கைது செய்யப்பட்டார். இதற்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஏன் போராட்டம் நடத்தவில்லை?
குமாரசாமி, அசோக், விஜயேந்திரா, அஸ்வத் நாராயணா, சி.டி.ரவி ஆகியோர், எங்கள் கேள்விகளுக்கு பாதயாத்திரையின் போது பதில் அளிக்க வேண்டும். பாதயாத்திரை பின்னணியில், காங்கிரஸ் தலைவர்கள் இருக்கின்றனர் என, விஜயேந்திரா கூறியுள்ளார். அவருக்கு தைரியம் இருந்தால், பாதயாத்திரை பின்னணியில் யார் இருக்கின்றனர் என்பதை சொல்ல வேண்டும்.
எடியூரப்பாவும், நீயும் என்னென்ன செய்தீர்கள் என்று தெரியும். அதையும் அவிழ்த்து விடுகிறேன். தேவகவுடா, ராம்நகர் மாவட்டத்துக்கு வந்து, 'என் கர்மபூமி, புண்ணிய பூமி' என கூறி, அதிகாரத்தை அனுபவித்தார். இந்த மாவட்டத்தில் இருந்து தான், முதல்வர், பிரதமர் பதவியை அவர் பெற்றார்.
குமாரசாமியின் மனைவி, இந்த பகுதியில் தான் எம்.எல்.ஏ.,வாக இருந்தார். குமாரசாமியும் எம்.எல்.ஏ., - எம்.பி., முதல்வர் உள்ளிட்ட பதவிகளை அனுபவித்தார். ஆனாலும், தங்கள் கட்சியின் கொடி இல்லாமல், பாதயாத்திரை நடத்துகிறாரே. ம.ஜ.த.,வை பா.ஜ.,வுடன் இணைத்து விட்டாரா. உங்களுக்கு சுயமரியாதை இருக்கிறதா?
அறிவிக்க முடியுமா
என்னுடைய சொத்து விபரம், சித்தராமையாவின் சொத்து விபரத்தை, மத்திய அரசிடம் குமாரசாமி அளித்திருப்பது எனக்கு தெரியும். உங்கள் குடும்பத்தின் சொத்து விபரத்தை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா?
உங்கள் சகோதரர் பாலகிருஷ்ணா, அரசு அதிகாரி. நீங்கள் சினிமா வினியோகஸ்தர். உங்கள் தந்தையிடம் சொத்து இருக்கவில்லை. ஆனாலும், இவ்வளவு சொத்து எப்படி வந்தது என்பதை சொல்லுங்கள்.
லோக்சபா தேர்தலின்போது, மத்தியில் ஆட்சி அமைந்த ஒரே நாளில் மேகதாது திட்டத்துக்கு ஒப்புதல் பெற்றுத் தருவதாக கூறினீர்கள். இதுகுறித்து பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. 2019ல் 38 எம்.எல்.ஏ.,க்கள் கொண்டிருந்த உங்களுக்கு 82 எம்.எல்.ஏ.,க்கள் கொண்டிருந்த காங்கிரஸ், முதல்வர் பதவியை தந்தது. இதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் போராட்டம், இன்று ராம்நகர், நாளை சென்னப்பட்டணா, நாளை மறுநாள் மத்துார், அதற்கடுத்த நாட்களில், மாண்டியா, மைசூரில் நடத்தப்பட உள்ளது. இன்று முதல் இந்த போராட்டத்தில், முதல்வர் சித்தராமையாவும் பங்கேற்க உள்ளார்.
'ஹெல்மெட்' அணியாத சிவகுமார்
பொதுக் கூட்டம் நடந்த இடத்திற்கு, பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா தலைமையில் காங்கிரசார் பைக் ஊர்வலமாக சென்றனர். அவரது பைக்கின் பின்னால் துணை முதல்வர் சிவகுமார் அமர்ந்திருந்தார். அவர் உட்பட யாருமே ஹெல்மெட் அணியவில்லை.