மக்களை கல்வியுடன் இணைத்தோம்: பிரதமருக்கு கார்கே பதில்
மக்களை கல்வியுடன் இணைத்தோம்: பிரதமருக்கு கார்கே பதில்
ADDED : மே 05, 2024 04:36 PM

கோல்கட்டா: ‛‛ஆட்சியில் இருந்த போது காங்கிரஸ் என்ன செய்தது என பிரதமர் மோடி கேட்கிறார். நாங்கள் மக்களை கல்வியுடன் இணைத்தோம்'' என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறினார்.
மேற்கு வங்க மாநிலம் சுஜாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கார்கே பேசியதாவது: நாட்டில் சிலர் பெரும் பணக்காரர்களாகவும், மற்றவர்கள் அனைவரும் மிகவும் ஏழைகளாகவும் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால் இன்று நாட்டின் 22 பேரிடம் 70 கோடி மக்களின் சொத்து உள்ளது. ஆட்சியில் இருந்த போது காங்கிரஸ் என்ன செய்தது என பிரதமர் மோடி கேட்கிறார். அதனால் சில புள்ளி விவரங்கள் தருகிறேன்.
ஜனநாயகம்
1951ம் ஆண்டில், நாட்டில் 18% படித்தவர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் 2014ல் இந்த எண்ணிக்கை 74% ஆக உயர்ந்துள்ளது. மக்களை கல்வியுடன் இணைத்தோம். காங்கிரஸ் எப்போதும் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்துள்ளது. நேரு ஜனநாயகத்தை வலுப்படுத்தினார்.பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்தார்?. நமது உரிமைகளுக்காக நாம் நிற்கவில்லை என்றால், ஜனநாயகமும் அரசியலமைப்பும் அழிந்துவிடும்.
சர்வாதிகாரி
மீண்டும் பா.ஜ., ஆட்சி வந்தால் நரேந்திர மோடி சர்வாதிகாரியாக மாறுவார். நாட்டில் சகோதரத்துவத்தை அழித்துவிடும். இந்திரா வங்கிகளை தேசியமயமாக்கியபோது, கிராமங்கள் தோறும் அரசு வங்கிகளின் கிளைகளைத் திறந்து ஏழைகளுக்கு கடன் வழங்க பாடுபட்டார். இவ்வாறு அவர் பேசினார்.