ADDED : செப் 26, 2025 12:36 AM

லக்னோ: உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கிய மதராசாவில் நடந்த ஆய்வின்போது, கழிப்பறையில் அடைக்கப்பட்டிருந்த 40 சிறுமியரை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
உத்தர பிரதேசத்தில் பஹ்ரைச் மாவட்டத்தின் பஹால்வாரா பகுதியில் உள்ள மூன்றடுக்கு கட்டடத்தில், மதரசா எனப்படும் இஸ்லாமிய மத கல்வியை போதிக்கும் பள்ளி சட்டவிரோதமாக இயங்கி வருவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, மாவட்ட துணை கலெக்டர் அஸ்வினி குமார் பாண்டே தலைமையில் அதிகாரிகள், அக்கட்டடத்தில் ஆய்வு செய்ய நேற்று முன்தினம் சென்றனர்.
இதையறிந்த மதரசா நிர்வாகிகள், ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, போலீசார் உதவியுடன் அக்கட்டடத்தை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மாடியில் இருந்த கழிப்பறை பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து, கழிப்பறையை போலீசார் உடைத்தபோது உள்ளே ஏராளமான சிறுமியர் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கு அச்சத்துடன் இருந்த, 9 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 40 சிறுமியரையும் அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பஹால்வாரா பகுதியில் இந்த மதரசா, மூன்று ஆண்டுகளாக அரசின் அனுமதியின்றி இயங்கியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட மதரசா நிர்வாகிகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.