கர்நாடக அரசு மீது ஐகோர்ட் அவமதிப்பு வழக்கு நிலங்களை முறைப்படுத்தாத வழக்கில் அதிரடி
கர்நாடக அரசு மீது ஐகோர்ட் அவமதிப்பு வழக்கு நிலங்களை முறைப்படுத்தாத வழக்கில் அதிரடி
ADDED : ஏப் 12, 2024 05:28 AM
பெங்களூரு: நிலங்களை முறைப்படுத்தாத வழக்கில், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அரசுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு, அக்ரமா - சக்ரமா சட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்தியது. இச்சட்டத்தால், மாநிலம் முழுதும் அங்கீகரிக்கப்படாத நிலங்கள் மற்றும் கட்டடங்கள் முறைப்படுத்தப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கே வழங்கப்படும்.
இந்நிலையில், கோலார் மாவட்டம், பாவரஹள்ளியை சேர்ந்த மஞ்சுநாத் உட்பட மாநிலத்தின் பல பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், 2019ல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அதில், 'மாநிலத்தில் முறைகேடாக பயன்படுத்திய கட்டடங்களை முறைப்படுத்த வேண்டும். இதை சரிபார்க்க குழு ஒன்றை அமைக்க வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தனர்.
இவ்வழக்கு, 2023 ஜூலை 14ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர், 'சரிபார்ப்பு குழு அமைக்கும் பணியை அரசு துவங்கி உள்ளது. குழு அமைந்தவுடன், மனுதாரர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்' என்றார்.
இதையடுத்து உயர் நீதிமன்றம், 'பலரும் இது தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே, 2023 டிச., 15ம் தேதிக்குள் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டது.
ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, இன்னும் குழு அமைக்கவில்லை. இதை எதிர்த்து, தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் ஹரேகலா கிராமத்தை சேர்ந்த ஜெரோம் டிசோசா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், அவமதிப்பு மனு தாக்கல் செய்தார்.
அதில், 'அக்ரமா - சக்ரமா' திட்டம் தொடர்பாக குழு அமைக்க 2023 டிச., 15ம் தேதி வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் கால அவகாசம் அளித்தது. ஆனால், இந்த காலக்கெடு முடிந்து மூன்று மாதம் ஆன பின்னரும் குழு அமைக்கவில்லை.
'எனவே, மாநில வருவாய் துறை முதன்மை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தார்.
இம்மனு, உயர் நீதிமன்ற முதன்மை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், வருவாய் துறை முதன்மை செயலர் ராஜேந்திர குமார் கட்டாரியாவுக்கு, நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

