ADDED : செப் 03, 2024 11:27 PM

பெங்களூரு : நிலுவை தொகையை வழங்கக் கோரி, பெங்., மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் இன்று முதல், வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
பெங்களூரு மாநகராட்சியின் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு, நீண்ட நாட்களாக நிலுவை தொகை வழங்கப்படாமல் பாக்கி வைக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகையில், 25 சதவீதத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, மாநகராட்சி தலைமை அலுவலகம் முன், ஒப்பந்ததாரர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்று முதல், பெங்களூரு சுதந்திர பூங்காவில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக, பெங்., மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் மஞ்சுநாத் அறிவித்துள்ளார்.
நிலுவை தொகை வழங்கும் வரை, மாநகராட்சி எல்லைக்குள் நடந்து வரும் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்துக்கு, மாநில அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
நிதி தட்டுப்பாட்டால், கடந்த ஓராண்டாக எந்த வளர்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தற்போது ஒப்பந்ததாரர்கள் வேலை நிறுத்தம் நடந்தால் பெங்களூரு மக்கள் பாதிக்கப்படுவர்.