குழாய்களுக்கு கட்டுப்பாட்டு கருவி; குடிநீர் வாரியம் 2 நாட்கள் கெடு
குழாய்களுக்கு கட்டுப்பாட்டு கருவி; குடிநீர் வாரியம் 2 நாட்கள் கெடு
ADDED : மார் 28, 2024 10:36 PM
பெங்களூரு : 'குடிநீர் குழாய்களுக்கு, வரும் 31ம் தேதிக்குள் ப்ளோ ரெஸ்ட்ரிக்டர் எனப்படும் கட்டுப்பாட்டு சாதனம் பொருத்தாவிட்டால், அபராதம் விதிக்கப்படும்' என, பெங்களூரு குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது.
இது குறித்து, பெங்களூரு குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வீடுகள், மால்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வர்த்தக வளாகங்கள், ஹோட்டல், ரெஸ்டாரென்ட் உட்பட, அனைத்து இடங்களில் உள்ள குடிநீர் குழாய்கள் இணைப்புகளுக்கு ப்ளோ ரெஸ்ட்ரிக்டர் சாதனம் பொருத்த வேண்டும்.
இதுதொடர்பாக, குடிநீர் வாரியம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. வரும் 31ம் தேதிக்குள் இந்த சாதனத்தை பொருத்துவது கட்டாயம்.
இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும். 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குடிநீர் வினியோகிக்கும் அளவும் 50 சதவீதமாகக் குறைக்கப்படும்.
குழாய்களில் ப்ளோ ரெஸ்ட்ரிக்டர் சாதனம் பொருத்தினால், தண்ணீர் பாயும் அளவை கட்டுப்படுத்தலாம். தண்ணீர் பயன்பாடும் குறையும்.
காவிரி நீரை வீணாக்கினால் தற்போது 5,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதே தவறை மீண்டும் மீண்டும் செய்வது கண்டறியப்பட்டால் ஒவ்வொரு முறைக்கும் கூடுதலாக 500 ரூபாய் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

