ADDED : செப் 01, 2024 12:18 AM

திருவனந்தபுரம்: கேரளாவில் மார்க்., கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. ஆளும் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக, மார்க்., கம்யூ.,வின் மூத்த தலைவர் ஜெயராஜன் இருந்து வந்தார்.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ., மூத்த தலைவர் பிரகாஷ் ஜாவடேகரை அவர் சந்தித்து பேசினார். இது தொடர்பாக, காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. முதலில் மறுத்த நிலையில், பின்னர் அதை ஜெயராஜன் ஒப்புக் கொண்டார். அப்போதே இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், மார்க்., கம்யூ.,வின் மாநிலக் குழு கூட்டம், திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்காத ஜெயராஜன், தன் சொந்த ஊரான கண்ணுாருக்குச் சென்றார். இதனால், அவர் தன் பதவியை ராஜினாமா செய்வார் அல்லது அதில் இருந்து நீக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
கூட்டத்துக்குப் பின், கட்சியின் மாநிலச் செயலர் கோவிந்தன் கூறியதாவது:
கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து ஜெயராஜன் நீக்கப்பட்டுள்ளார். கட்சி மற்றும் கூட்டணிக்கு எதிரான செயல்பாடுகளால், ஜெயராஜன் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். மூத்த தலைவர் ராமகிருஷ்ணன், இனி ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.