ADDED : ஆக 15, 2024 04:47 AM

பெங்களூரு : ''மாநில மகளிர் தலைவியான எனக்கு நிறைய பொறுப்புகள் உள்ளன. அனைவரையும் ஒருங்கிணைத்து செல்வேன்,'' என, மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி சவுமியா ரெட்டி தெரிவித்தார்.
கர்நாடக மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியாக சவுமியா ரெட்டி நியமிக்கப்பட்டார். நேற்று துணை முதல்வர் சிவகுமாரை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்.
பின், அவர் அளித்த பேட்டி:
மகளிர் காங்கிரஸ் தலைவியாகும் வாய்ப்பு கிடைத்தது, என் பாக்கியம். காங்கிரஸ் எம்.பி., ராகுல், முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் சிவகுமார் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு நன்றி.
நம் மாநிலத்தில் 50 சதவீதம் பெண்கள் உள்ளனர். இங்கு வாக்குறுதித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.
ஐந்து வாக்குறுதிகள் மூலம், மாநில பெண்களுக்கு சில சிறப்பு சலுகைகள் வழங்கி, பெண்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு முன்வந்துள்ளது.
கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு 2,000 ரூபாய் நிதி கொடுக்கப்படுகிறது. சக்தி திட்டத்தால் பெண்கள், மாநில அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்கின்றனர்.
மத்திய அரசால், பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நம் மாநிலம் வஞ்சிக்கப்படுகிறது. காங்கிரசில் எந்த குழப்பமும் இல்லை.
காங்கிரசுக்கு 135 ஆண்டு வரலாறு உள்ளது. கட்சியில் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட்டு உள்ளது. மாநில மகளிர் தலைவியாக, என் பணியை செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.