ADDED : ஆக 29, 2024 02:58 AM

பெங்களூரு : பா.ஜ., முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தொடர்பான ஆபாச வீடியோ செய்தியை வெளியிட வக்கீல், ஊடகங்களுக்கு தடை விதித்து, பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, 64, தற்போது ஹாவேரி தொகுதி பா.ஜ., - எம்.பி.,யாக உள்ளார். பசவராஜ் பொம்மையின் ஆபாச வீடியோ தன்னிடம் இருப்பதாக, வக்கீல் ஜெகதீஷ் என்பவர், இரண்டு நாட்களுக்கு முன், சமூக வலைத்தளங்களில் கூறி இருந்தார்.
இதையடுத்து, 'எனக்கு எதிரான ஆபாச வீடியோவை வெளியிட, வக்கீல் ஜெகதீஷுக்கு தடை விதிக்க வேண்டும். என் தொடர்பான செய்தியை வெளியிட, ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும்' என, பெங்களூரு 8வது கூடுதல் நகர சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பசவராஜ் பொம்மை நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை நீதிபதி வாணி ஷெட்டி நேற்று விசாரித்தார். பசவராஜ் பொம்மை சார்பில், மூத்த வக்கீல் பிரபுலிங்க நவதகி ஆஜராகி வாதாடினார். வாதம் முடிந்த பின், நீதிபதி வாணி ஷெட்டி கூறுகையில், ''மனுதாரரின் ஆபாச வீடியோ தன்னிடம் இருப்பதாக கூறிய, வீடியோவை வக்கீல் ஜெகதீஷ் 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும். சிவில் நடைமுறை சட்ட விதிகளுக்கு, மனுதாரர் இணங்க வேண்டும்,'' என்று கூறினார்.
மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மனுதாரர் தொடர்பான செய்தி வெளியிட, வக்கீல், ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

