மதராஸி முகாம் வீடுகளை இடிக்க ஐகோர்ட் தடை அறிக்கை தாக்கல்ல் செய்ய டி.டி.ஏ.,க்கு உத்தரவு
மதராஸி முகாம் வீடுகளை இடிக்க ஐகோர்ட் தடை அறிக்கை தாக்கல்ல் செய்ய டி.டி.ஏ.,க்கு உத்தரவு
ADDED : செப் 10, 2024 08:00 PM

புதுடில்லி:தென்கிழக்கு டில்லி பழைய பாரபுல்லா மேம்பாலம் பகுதியில் உள்ள மதராஸி முகாமில் வீடுகளை இடிக்க தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை உறுதி செய்யுமாறு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜங்புரா பழைய பாரபுல்லா மேம்பாலம் உள்ள இடத்தில் புதிய மேம்பாலம் கட்ட டில்லி மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக மேம்பாலம் அருகேயுள்ள மதராஸி முகாமில் உள்ள வீடுகளை இடிக்க முடிவு செய்தது. அங்கு வசிப்போரை வெளியேறுமாறு பொதுப்பணித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மேம்பாட்டு ஆணையத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மதராஸி முகாம் குடியிருப்போர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு, தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
டில்லி மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரப்சஹய் கவுர், “மதராஸி முகாமில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகளால் பாரபுல்லா வடிகாலில் இருந்து மழைநீர் செல்ல இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து, டில்லி அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யலாம். மதராஸி முகாமில் உள்ள ஆக்கிரமிப்புக் கட்டடங்களை நாளை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,”
குடியிருப்போர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் இந்தப் பகுதியை விட்டு எங்கு செல்வர். டில்லி மேம்பாட்டு ஆணையம் மாற்று இடம் கூட வழங்காமல் உடனடியாக காலி செய்யச் சொல்கிறது'என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மதராஸி முகாமில் தற்போதைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. அதை டில்லி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
மழைநீர் செல்ல இடையூறாக இருந்தால் வீடுகளை கண்டிப்பாக காலி செய்யத்தான் வேண்டும். சிறு மழைக்கே டில்லி மாநகரம் வெள்ளத்தில் மூழ்கி விடுகிறது. டில்லியில் வசிக்கும் மற்றும் வரி செலுத்தும் மக்கள், தங்கள் வீடுகள் வெள்ளத்தில் மூழ்குவதை விரும்பவில்லை. மீண்டும் மீண்டும் டில்லி மாநகரம் வெள்ளத்தில் மூழ்குவதை அனுமதிக்க முடியாது. மழைநீர் வடிகால்வாய் மற்றும் கழிவு நீர் கால்வாய்களில் தூர்வார வேண்டும்.
அதேநேரத்தில் மதராஸி முகாமில் வசிப்போருக்குக் மாற்று இடம் வழங்கப்படுவதை உயர் நீதிமன்றம் உறுதி செய்யும். மதராஸி முகாமில் உள்ள வீடுகள் தண்ணீர் செல்ல இடையூறாக உள்ளதா என்பது குறித்து 10 நாட்களுக்குள் டில்லி மேம்பாட்டு ஆணையம், டில்லி அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

