எனக்கு கிடைத்த முதல்வர் வாய்ப்பை இபிஎஸ்க்கு தந்தேன்: செங்கோட்டையன்
எனக்கு கிடைத்த முதல்வர் வாய்ப்பை இபிஎஸ்க்கு தந்தேன்: செங்கோட்டையன்
UPDATED : நவ 28, 2025 08:52 PM
ADDED : நவ 28, 2025 08:37 PM

கோபிசெட்டிபாளையம்: '' அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் -ஐ பொதுச்செயலாளராக, முதல்வராக நான் முன்மொழிந்தேன். எனக்கு கிடைத்த வாய்ப்பை அவரை ஏற்றுக் கொள்ளுமாறு கூறினேன், '' என தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், நடிகர் விஜய் முன்னிலையில் நேற்று தவெகவில் இணைந்தார். அவருக்கு மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இன்று தனது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் செங்கோட்டையன் பேசியதாவது: ஆட்சி செய்த கட்சியே ஆள வேண்டுமா. புதிய தலைமுறை உருவாக்க வேண்டாமா. மக்கள் பணியாற்றுவதற்கு புதிய தலைமுறை உருவாக்க வேண்டும். படத்தில் நடித்தால் விஜய்க்கு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால் தேவையில்லை எனக் கூறிவிட்டு மக்கள் பணியாற்ற வந்துள்ளார். தூய்மையான ஆட்சி, மக்களாட்சி, தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்ற உள்ளார்.
என்னிடம் ஏன் இன்னும் ஜெயலலிதா படத்தை வைத்துள்ளீர்கள் என கேட்டனர். இங்கு தான் ஜனநாயகம் உள்ளது. யார் படத்தை வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம். வேறு படத்தை வைத்தால் தான் சிரிப்பீர்கள். ஆனால், எங்களை போன்றவர்கள் எந்த படத்தை வைத்தாலும் அரவணைத்து செல்லும் தலைவராக விஜய் இருப்பார்.
நாங்கள் தர்மத்தை காக்கிறோம். எல்லோரும் எல்லாம் பெற வேண்டும். ஜாதி மத பேதமற்ற, ஊழல் அற்ற ஆட்சி அமைக்க சுதந்திரமாக பணியாற்றலாம் என என்னை அரவணைத்து சொன்னார். உங்களை போன்ற இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு வழிகாட்டியாக இருந்து பணியாற்றினேன். எம்ஜிஆர் பயணம் மேற்கொண்ட போது அவருடன் இருந்து பணியாற்றினேன். மூன்றாவது தலைமுறையாக விஜய்க்கு வழிகாட்டியாக பணியாற்றுவேன்.
இபிஎஸ்-ஐ பொதுச்செயலாளராக, முதல்வராக நான் முன்மொழிந்தேன். எனக்கு கிடைத்த வாய்ப்பை அவரை ஏற்றுக் கொள்ளுமாறு கூறினேன். ஆனால், அவரிடம் சமத்துவம், மனிதநேயம் இல்லை. 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் என்னுடைய உழைப்பு அனைவருக்கும் தெரியும். சாதாரண தொண்டராக கூட இருக்கக்கூடாது என என்னை நீக்கினார். உடன் இருப்பவர்களை நீக்கினார்.
துக்கம் விசாரிக்க சென்ற போது என்னை சந்தித்தவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இவர் நாளை ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். விஜய் தான் ஆட்சிக்கு வரப்போகிறார். டிச.,மாதத்துக்குள் தவெக கூட்டணி வலிமையாகும். பல முன்னாள் அமைச்சர்களும் வருவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

