மன்னிப்பது குறித்து முடிவெடுக்கவில்லை ராம்தேவுக்கு கோர்ட் மீண்டும் கண்டனம்
மன்னிப்பது குறித்து முடிவெடுக்கவில்லை ராம்தேவுக்கு கோர்ட் மீண்டும் கண்டனம்
ADDED : ஏப் 17, 2024 12:57 AM

புதுடில்லி, தவறான விளம்பரம் வெளியிட்ட வழக்கில், யோகா குரு ராம்தேவ் மற்றும் 'பதஞ்சலி' நிறுவனத்தின் பாலகிருஷ்ணா ஆகியோர் பொது மன்னிப்பு கேட்க ஒரு வாரம் அவகாசம் அளித்த உச்ச நீதிமன்றம், 'உங்களை மன்னிப்பதா வேண்டாமா என்பது குறித்து நீதிமன்றம் இன்னும் முடிவெடுக்க வில்லை' என, தெரிவித்தது.
'பதஞ்சலி' நிறுவனத்தை நடத்தி வரும் யோகா குரு ராம்தேவ், 58, ஆயுர்வேத மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
ஆயுர்வேதம்
கொரோனா பெருந்தொற்றின் போது, 2021ல் கொரோனில் என்ற ஆயுர்வேத மருந்தை விற்பனைக்கு கொண்டு வந்தார். அலோபதி மருந்துகளால் கொரோனாவை குணப்படுத்த முடியாது என்றும், ஆயுர்வேதம் மட்டுமே சிறந்த மருத்துவம் என்றும் தெரிவித்தார்.
இதற்கு, இந்திய மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. ராம்தேவ் கூறுவது முழுமையான பொய் என வாதிட்டது.
அதன் பின், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு குணப்படுத்த முடியாத நோய்களுக்கு ஆயுர்வேதத்தில் மருந்துகள் இருப்பதாகவும், அலோபதி மருத்துவம் ஏமாற்று வேலை என்றும் கூறினார்.
இது தொடர்பான விளம்பரங்களையும் அவர் வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக, ராம்தேவ் மீது இந்திய மருத்துவர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரியது.
கடந்த ஆண்டு நவ., 21ல் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனத்தை எச்சரித்தது. இது போன்ற தவறான விளம்பரங்களை தொடர்ந்து வெளியிட்டால் கடும் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டது.
இதை தொடர்ந்தும், பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை வெளியிட்டு வருவதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடுக்கு அனாமதேய கடிதம் அனுப்பப்பட்டது.
இதன் அடிப்படையில், ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாகி பாலகிருஷ்ணா ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த உச்ச நீதிமன்றம், அது தொடர்பாக பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியது.
இந்த வழக்கு கடந்த 2ம் தேதி விசாரணைக்கு வந்தபோது ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.
அதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், வெறும் விளம்பரத்துக்காக மன்னிப்பு கேட்பதாக சீறியது. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் உத்தரகண்ட் அரசு மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கடுமை காட்டியது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, அமானுல்லா முன், ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆஜராகினர்.
ஏற்க முடியாது
அப்போது, உச்ச நீதிமன்றத்தின் மதிப்பை சீர்குலைப்பது என் நோக்கம் அல்ல. பொது மன்னிப்பு கேட்க தயார். எதிர்காலத்தில் இதுபோல நடக்காமல் கவனமாக இருப்பதாக ராம்தேவ் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள் கூறியதாவது:
யோகாவுக்கு தாங்கள் ஆற்றிய பங்களிப்பை மதிக்கிறோம். அதே நேரம், ஆயுர்வேதத்தின் மகத்துவத்தை விளம்பரப்படுத்த பிற மருத்துவ முறைகளை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது.
உச்ச நீதிமன்றம் தங்கள் முந்தைய உத்தரவுகளில் கூறியதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நீங்கள் அப்பாவிகள் கிடையாது.
இந்த விவகாரத்தில் பொது மன்னிப்பு கேட்க ஒரு வாரம் அவகாசம் அளிக்கிறோம் இருப்பினும், இந்த வழக்கில் உங்களை மன்னிப்பதா வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணை, வரும் 23க்கு ஒத்திவைக்கப்பட்டது.

