ADDED : ஜூலை 29, 2024 08:28 PM

அமைதி தவழும் முகத்துடன், தியானத்தில் அமர்ந்திருக்கும் சிவனை பார்த்துள்ளீர்களா? இல்லையென்றால் மைசூருக்கு வந்து, சிவனை தரிசனம் செய்யுங்கள்.
மைசூரு பெயரை கேட்டால், சாமுண்டி மலை சாமுண்டீஸ்வரி கோவில், அரண்மனை, தசரா திருவிழா ஆகியவைதான் நினைவுக்கு வரும்.
இவை தவிர மைசூரில் பிரசித்தி பெற்ற கோவில்களும் உள்ளன. பக்தர்களை கவர்கின்றன. இவற்றில் சிவபெருமானின் கோவிலும் ஒன்றாகும்.
பொதுவாக சிவன் கோபக்கார கடவுள் என்ற கருத்து உள்ளது. ருத்ர தாண்டவமாடும் சிலைகள், ஓவியங்கள், கோபத்துடன் தென்படும் சிலைகள், ஓவியங்களை நாம் பார்த்திருப்போம். சாந்தம் தவழும் வடிவத்தில் சிவன் தரிசனம் தருவது அபூர்வம்.
மைசூரின், நஞ்சன்கூடு 'தென்காசி' என, பிரசித்தி பெற்றதாகும். நஞ்சன்கூடின், நஞ்சுண்டேஸ்வர சுவாமி கோவில் வளாகத்தில், சாந்தமான, கருணை ததும்பும் முகத்துடன், தியான கோலத்தில் அமர்ந்துள்ள சிவபெருமானை தரிசிக்கலாம்.
நஞ்சுண்டேஸ்வரா சுவாமி கோவிலின் கோபுரத்துக்கு சமமாக, சிவன் விக்ரஹம் செதுக்கப்பட்டுள்ளது. 50 அடி உயரம் விக்ரஹமாகும். சிவனின் அருகில் நின்று அண்ணாந்து பார்த்தால், சிவன் ஆகாய உயரத்தில் இருப்பதாக தோன்றும். மண், செங்கல்களால் உருவாக்கப்பட்ட இந்த விக்ரஹம், 2011ல் திறந்துவைக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்களை சுண்டி இழுக்கிறது.
மைசூருக்கு வரும் சுற்றுலா பயணியர், பல இடங்களை சுற்றி பார்த்த பின், சிவனை தரிசிக்க மறப்பதே இல்லை. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
திங்கட்கிழமை, பிரதோஷ நாட்களில், சுற்றுப்பகுதி ஊர்களில் இருந்து பெருமளவில் பக்தர்கள் வந்து, சிவனை தரிசனம் செய்த பின், மன நிறைவு, நிம்மதியுடன் செல்கின்றனர்.
கோவிலுக்கு வர போக்குவரத்து வசதி ஏராளம். நஞ்சன்கூடுக்கு ரயில், பஸ் வசதி, தனியார் வாகன வசதியும் உள்ளது. சொந்த வாகனங்களிலும் வரலாம்
.- நமது நிருபர்